ARTICLE AD BOX
புதுச்சேரி டூ கோவை.. பல கோடி மோசடி செய்த கும்பல்.. நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சிக்கல்?
புதுச்சேரி: நாடு முழுவதும் பல கோடி கிரிப்டோகரன்சி மோசடி செய்த கோவை இளைஞர்கள் இரண்டு பேரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.இந்தவிவகாரத்தில் பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் மோசடி செய்த கிரிப்டோ கரன்சி நிறுவனத்தை திறந்து வைத்தது, மகாபலிபுரத்தில் 100 சொகுசு கார்களை முதலீட்டாளருக்கு வழங்கியதால் பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு சிக்கல் எழுந்துள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் அசோகன் . இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது ஓய்வு பெற்ற பிஎன்என்எல் அதிகாரியான அசோகனின் செல்போன் எண்ணுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த மெசேஜில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமாக கூறப்பட்டிருந்ததாம். இதனை நம்பிய ஓய்வு பெற்ற பிஎன்என்எல் அதிகாரியான அசோகன், குறுஞ்செய்தி வந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்

அப்போது அவர்கள் கூறியதன் படியே, கிரிப்டோ கரன்சியில் ரூ.98 லட்சத்தை பல்வேறு தவணைகளாக முதலீடு செய்தாராம் அசோகன். அதன் பின்னர் அவரது கணக்கில் ரூ.9 கோடி இருந்ததாக தெரிய வந்தது. ஆனால் அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் அவர் அந்த நபரை தொடர் கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அந்த நபர் எடுக்கவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அசோகன் இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்
அதன்பேரில் புதுச்சேரி போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினார்கள். இதில் கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து புதுச்சேரி தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்து சென்று 36 வயதாகும் நித்தீஷ் ஜெயின் , 40 வயதாகும் அரவிந்த்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கில் கோவையை சேர்ந்த தாமோதரன், நூர்முகமது, சந்தானம், இம்ரான்பாஷா, நந்தியப்பன், கணேசன், ஆலியா, ரேஷ்மா உள்பட சென்னை, பெங்களூரு பகுதியை சேர்ந்த 10 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.. இந்த கும்பல் கடந்த கடந்த 2022-ம் ஆண்டு கோவையில் ஆஷ்பே என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறது அதன் தொடக்க விழாவில் நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்களை மோசடி நிறுவனத்தினர் பங்கேற்க வைத்துள்ளனர்.
3 மாதங்களுக்கு பிறகு மாமல்லபுரத்தில் சொகுசு விடுதியில் நடந்த விழாவில் பிரபல நடிகையான காஜல் அகர்வால் மூலம் தங்களிடம் முதலீடு செய்த 100 பேருக்கு கார்களை பரிசாக வழங்கி, அதிக முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளார்கள். இதனால் உண்மை என்று நம்பி பலர் பணம் செலுத்தி உள்ளனர்.இப்படி டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் ரூ.50 கோடி வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பல் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களிடம் மட்டும் ரூ.3 கோடியே 60 லட்சம் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 2 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே கோவையில் கிரிப்டோ கரன்சி நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்ற தமன்னா, மாமல்லபுரத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சொகுசு கார்களை தரும் விளம்பரத்தில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் ஆகியோருக்கு சிக்கல் எழுந்துள்ளது.விளம்பரத்தில் பங்கேற்றதற்காக இருவரிடம் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.