ARTICLE AD BOX
புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் சாமிநாதான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், ``புதுச்சேரியில் கடந்த நான்கு ஆண்டுகளில் அமைச்சர்களுக்கான டீ செலவு ரூ.28 லட்சம், பூங்கொத்து வாங்கியதற்கு ரூ.41 லட்சம் மற்றும், ஒரு மாதத்திற்கு ரூ.80,000 ஆயிரம் வரை காருக்கு டீசல் போடப்படுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் அரசு பலவகையில் மக்களுடைய வரி பணத்தை விரயம் செய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு பணம் இல்லை. சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் மாநிலத்தில் கழிப்பிட வசதி இல்லை. அரசு பொது மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு இல்லை. ஒவ்வொரு மாதமும் அமைச்சர்கள் தலா ரூ.80,000-க்கு டீசல் போட்டிருக்கிறார்கள்.
5 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள பாண்டிச்சேரியில் இவர்கள் ரூ.80,000-க்கு டீசல் போட்டால், பெரிய மாநிலங்களில் ஆட்சி செய்தால் ரூ.8 லட்சத்திற்கு போடுவார்களா ? முந்தைய காங்கிரஸ் அரசு இப்படித்தான் பல்வேறு வகையில் மக்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி வந்தது. அதே தவறைத்தான் காங்கிரஸ் சிந்தனை கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் அரசும் செய்து வருகிறது. காங்கிரஸ் அல்லாத காங்கிரஸ் சிந்தனை கொண்ட அரசு, காமராஜர் ஆட்சி என்ற பெயரில் மக்கள் பணத்தை விரயம் செய்யக்கூடிய அரசாக புதுச்சேரி அரசு உள்ளது. இதனை புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனும் சிந்திக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது.
ஏழை மக்கள் இறந்து விட்டால் அரசு மருத்துவமனையில் உடனடியாக செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை. சுமார் ரூ.5,000 ஆயிரம் செலவு செய்து தனியார் ஆம்புலன்ஸில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் பூவுக்காக 41 லட்சம் ரூபாய் செலவு செய்யக் கூடிய மக்கள் விரோத அரசாக இருக்கிறது இந்த அரசு. புதுவை மக்கள் இவர்கள் அனைவரையும் இந்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நேர்மையானவர்களை தேர்வு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் உப்புக்கு வரி போட்ட வெள்ளையரை வெளியேற்றினோம். அதுபோல புதுச்சேரி மக்களின் மீது பல்வேறு வரிகளை சுமத்திய கடந்த காங்கிரஸ் அரசும், தற்போதைய அதே காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த என்.ஆர்.காங்கிரசையும் ஒட்டு மொத்தமாக வீட்டு அனுப்ப வேண்டும்.

இலவசத்தை கொடுத்து ஊழலை மறைக்கலாம் என்று நினைத்தால் மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். அதற்கு உதாரணம் டெல்லி தேர்தல். அதே போல் இந்த தேர்தலில் மதுபான தொழிற்சாலைகள் நிறுவிய ஊழல்வாதிகளை அடையாளம் காட்டக்கூடிய தேர்தலாக அமையும். புதுச்சேரிக்கு எத்தனை வி.ஐ.பிக்கள் வந்தார்கள் ? அவர்களுக்கு ரூ.40 லட்சத்தில் பூங்கொத்து வாங்கினோம் என்று காதில் பூ சுற்றுகிறது இந்த அரசு. அரசாங்கம் பூ சுற்றுகிறது. திருமண மற்றும் சுப காரியங்களுக்கு செல்பவர்கள் தங்கள் சொந்த செலவில்தான் அன்பளிப்பு கொடுப்பார்கள். ஆனால் இவர்கள் மக்கள் வரிப்பணத்தில் பூங்கொத்து கொடுக்கிறார்கள். இந்தியாவிலே இதுபோன்ற கொள்ளை வேறு எங்கும் நடக்கவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எம்.பி-யிடம் விசாரணை!