புதர்மண்டி கிடக்கும் தும்பவனம் கால்வாய்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை

10 hours ago
ARTICLE AD BOX

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் புதர்மண்டிக் கிடக்கும் தும்பவனம் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியில் இருந்து தும்பவனம் கால்வாய் தொடங்குகிறது. ராகவேந்திரா நகர், போஸ்டல் காலனி, அரசு ஊழியர்கள் குடியிருப்பு வழியாக வந்தவாசி சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறு பாலத்தின் வழியாக வேகவதி ஆற்றில் மழைநீர் கலக்கும் வகையில், இந்த கால்வாய் அமைந்துள்ளது.

திருப்பருத்திக்குன்றம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், தும்பவனம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயில் முறையான பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள், கோரை புற்கள் அதிகளவில் முளைத்து, புதர்மண்டி தூர்ந்த நிலையில் உள்ளது.

மேலும், அப்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீரும் இந்த கால்வாயில் விடப்படுவதால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசும் அவல நிலையில் காணப்படுகிறது. அதிகளவில் கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் தொற்று நோய் பாதிப்புகளால் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, கலெக்டர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு அருகிலேயே அதிகளவில் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கும் தும்பவனம் கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் தேங்காமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புதர்மண்டி கிடக்கும் தும்பவனம் கால்வாய்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article