பிள்ளைப்பாக்கம், மணலூர் ஆகிய இடங்களில் 1112 கோடி ரூபாய் செலவில் புதிய மின்னணு உற்பத்தி பேட்டைகளை மத்திய அரசு அமைக்கவுள்ளதாக மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று தெரிவித்துள்ளார்.

புதிய மின்னணு உற்பத்தி பேட்டைகள்:

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய அவர், இந்தியாவின் மின்னணு உற்பத்தி தற்போது உச்சத்தை எட்டியுள்ளதாகக் கூறினார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் காரணமாக, இத்துறையில் இந்தியா வெகு வேகமாக வளர்ந்து வருகிறது என்றும், உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்திவருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு மின்னணு துறை மிகவும் மந்த நிலையில் இருந்த போது, அத்துறைக்கு முக்கியத்துவம் அளித்ததன் பயனாக, இன்று உலகின் இரண்டாவது ஏற்றுமதி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தெளிவான சிந்தனை, செயல்பாட்டில் கவனம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த நிலைக்கு நாடு உயர்ந்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே துறையில் தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறிய அமைச்சர், கடந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ 6100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாவும், இது முன்னெப்போதையும் விட அதிகம் என்றும் கூறினார்.

ரயில்வே அமைச்சர் சொன்ன சர்ப்ரைஸ்:

இதில், புதிய ரயில் பாதைகள் அமைத்தல், பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைத்தல், ரயில் நிலையங்கள் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். இவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மண்டல அளவிலான பொது மேலாளர்கள் ஆகியோருடன் தாம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறினார்.

இது போன்ற நடவடிக்கைகளில், அரசியலுக்கு அப்பாற்பட்டு, திட்டங்களின் பயன்கள் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்னணு தொழிலைப் பொறுத்தவரை, உற்பத்தியுடன், வடிவமைப்பு பொருளாதாரமும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார். நம் நாட்டை மிகவும் வலிமையாக்குவது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது, உலகம் நம்மை மென் சக்தியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஒரு பெரிய இலக்காகப் பார்க்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் சிந்தனையாகும் என்று அமைச்சர் கூறினார்.

தமிழ் மிகவும் பழமையான, மிகவும் இனிய மொழி என்று கூறிய அமைச்சர், அதனை அனைவரும் மதிப்பதாகத் தெரிவித்தார். அது, இந்தியாவின் சொத்தாக மட்டுமல்லாமல், உலகத்தின் சொத்தாகவும் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இது நம் அனைவருக்கும் பெருமை என்று தெரிவித்த அவர், நாம் அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்கிறோம் என்றார். அதில் பெருமை கொள்கிறோம், அதில் மகிழ்ச்சி அடைவோம், அனைத்து இந்திய மொழிகளையும் ரசிப்போம். அந்த உணர்வோடுதான் இன்று பிரதமர் செயல்படுகிறார் என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய இடத்தைக் கொடுத்து, அவற்றுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எடுத்துக்காட்டாக, தொலைத்தொடர்பு மற்றும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள், ஏன் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும், ஏன் அது எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கக்கூடாது என பிரதமர் கேள்வி எழுப்பியதாகவும், அது தங்களை ஊக்குவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசியலமைப்பில் உள்ள அனைத்து மொழிகளும், சேவைகளிலும், செயலிகளிலும் பயனர்களுக்கு விருப்பமான தேர்வு இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன், மாநில தொழில்துறை செயலாளர் அருண் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.