பிளாஸ்டிக் - உற்பத்தி, உபயோகம் குறைக்க வேண்டாம்... இதை செய்யலாமே!

3 days ago
ARTICLE AD BOX

மனிதன் சுமக்க வேண்டிய பளுவை வெகுவாகக் குறைத்ததில் பிளாஸ்டிக்கின் பங்கு தலையாயது! குறுகிய காலத்தில் உலகைத் தன் வசமாக்கிக் கொண்ட பொருள் இதுவென்றால் அதனை மறுப்பதற்கில்லை.

பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் லியோ பக்லண்ட் (Belgian Chemist Leo Baekeland)1907 ஆம் ஆண்டில் செயற்கை பிளாஸ்டிக்கைக் (synthetic plastic) கண்டு பிடித்து, உலகுக்கு அறிமுகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.1940 களில்தான் நமது நாட்டிற்குள் புகுந்திருக்கிறது. 1957 ல் இந்தியாவில் முதல் பிளாஸ்டிக் தொழிற்சாலை தொடங்கப்பட்டு, பாலிஸ்டைரின் (polystyrene) உற்பத்தி செய்யப்பட்டது. அதன்பிறகு பிளாஸ்டிக்கின் தாக்கம் பட்டி தொட்டிகளிலும் பரவியது.

பிளாஸ்டிக்கினால் வீட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், எந்திர பாகங்கள் என்று அனைத்துமே செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மனித வாழ்வின் இன்றியமையா ஒரு பொருளாகவே அது அமைந்து விட்டது. தேவைப்படாத இடங்களில்கூட அதன் தேவையைப் புகுத்திய மனிதன், தற்போது அதன் தேவையைக் குறைக்க முயன்றாலும் அது முடியாமல் தவிக்கிறான்!

பிளாஸ்டிகை நன்றாகவே பயன்படுத்திக் கொள்ளும் நாம், முறையாக அதனை டிஸ்போஸ் செய்யத் தவறுவதால் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். அதனை எப்படி அப்புறப்படுத்த வேண்டுமோ அப்படிச் செய்திருந்தால் பிரச்சனையே எழுந்திருக்காது!

கண்ட இடத்திலும் அதனைப் போட்டதால் சுற்றுச் சூழல் கெட்டது; நோய்களுக்கு வழி வகுத்தது. மாடுகள் தின்று மரணமடைந்தன! அகழ்வாரைத் தாங்கும் நிலம் கூட அதனை ஏற்க மறுத்து ஒதுக்கி விடுகிறது. மக்கா குப்பை அது என்பதால் போலும். அது மறு சுழற்சிக்கு உட்பட்டது என்பதே அதன் தனி மவுசுக்குச் சான்று.

மனிதர்களில் ஜாதி, மதம், இனம் என்றெல்லாம் வேறு படுத்திப் பார்க்கும் நாம், வீட்டில் சேதாரமாகும் குப்பையைக்கூட மக்குவது! மக்காதது! என்று பிரித்து வைக்க மனமின்றிச் செயல்படுகிறோம்!

ஒரே முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் போன்ற சிலவற்றைப் பயன்படுத்த அரசு தடை விதித்தும் கூட, அவற்றின் பயன்பாட்டை முழுதுமாக ஒழிக்க முடியவில்லை. மக்களும் மனது வைப்பதில்லை. அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

'ஏன் முடியவில்லை?' என்று கேட்டால், ஒரே பதில் - 'பெரிய நாடு; கற்காதவர்கள் அதிகம்; இப்படித்தான் இருக்கும்' என்று! இதனைக் கேட்டுக் கேட்டு வெறுப்பே மேலோங்குகிறது. அதே சமயம் ஒவ்வொரு தனிமனிதனின் பின்னாலும் அதிகாரிகள் வலம் வந்து கொண்டிருக்க முடியாது என்பதும் ஏற்கக் கூடியதே!

இதையும் படியுங்கள்:
மெழுகு புழுக்கள் - பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வாக அமையுமா?
Plastic

சரி, பிளாஸ்டிக்கை ஒழிக்கவே முடியாதா? என்று கேட்டால் “ஏன் முடியாது? நிச்சயமாக முடியும்!” என்பதே நமது பதில்! எப்படி என்கிறீர்களா?

இருக்குமிடத்தை விட்டு

இல்லாத இடந்தேடி

எங்கெங்கோ அலைகின்றார்

ஞானத்தங்கமே! அவர் ஏதும்

அறியாரடி ஞானத்தங்கமே!

என்பது போல, செய்ய வேண்டியதை விட்டு விட்டு, செய்ய முடியாததைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால், அந்தரத்தில் ஊஞ்சல் ஆட வேண்டியதுதான். இது வரை என்னென்னவோ சட்டங்கள் போட்டீர்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று மக்கள் வரிப் பணத்தைக் கோடிக் கணக்கில் கொட்டித் தீர்த்தீர்கள். ரிசல்ட் என்னவோ பூஜ்யந்தான். உற்பத்தியும் குறையவில்லை; உபயோகமும் மட்டுப்படவில்லை!

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்போம்; துணிப்பைகளை ஏற்போம்!
Plastic

மாறாக இனி இப்படிச் செய்யலாம். உற்பத்தியையும் குறைக்க வேண்டாம்; உபயோகத்தையும் தடுக்க வேண்டாம்! டிஸ்போசலை மட்டும் முறையாகச் செய்தால் போதுமானது!

  • பொது மக்கள் கூடும் அத்தனை இடங்களிலும் போதுமான குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். கீழே யார் போட்டாலும் கணிசமான அபராதம் விதிக்க வேண்டும்; அதுவும் ஸ்பாட்டிலேயே! 'முடியுமா?' என்று கேட்டால், 'நிச்சயமாக முடியும்.' சிங்கப்பூர் செல்லும் நம் ஆட்களுக்கு வாயில் எச்சிலே ஊறுவதில்லையாம்! அது மட்டும் எப்படி முடிகிறது?

  • சூப்பர் மார்க்கட், மால் போன்ற இடங்களில், பாட்டில்கள் மற்றும் கவர்களுக்கென்று தனி பெட்டிகள் வைக்கப்பட வேண்டும்.

  • மறுசுழற்சி வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

  • பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை, முன்பு போல பழைய பொருட்கள் வாங்கும் கடைகளில் வாங்க அனுமதிக்க வேண்டும்.

  • மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஆர்.வாசுதேவன் அவர்கள் கண்டு பிடிப்பின்படி, 2002 லேயே சென்னையில் பிளாஸ்டிக் சாலை போடப்பட்டது. அது தொடர்ந்து செயல் படுத்தப்பட்டிருக்குமேயானால் இன்று சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடாக ஏரிகளிலும், குளங்களிலும், மற்ற ஒதுக்குப் புறமான இடங்களிலும் பிளாஸ்டிக் இப்படிக் குவிந்திருக்காது! இப்பொழுதும் தாமதமில்லை! இனியாவது பிளாஸ்டிக் சாலைகள் போடுவதை ஊக்குவிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் Vs காப்பர் Vs ஸ்டீல்: எந்த வாட்டர் பாட்டில் சிறந்தது?
Plastic
  • -அவற்றால் பயன் அதிகமென்றே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சென்னை போன்ற வெள்ள அபாயங்களுக்கு உட்படும் நகரங்களில் பிளாஸ்டிக் சாலைகள் குறைந்த செலவில் நீண்ட பயன் தருபவைகளாக அமையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

  • ‘மனமிருந்தால் மார்க்கமுண்டு!’ என்பதற்கிணங்க ஆட்சியாளர்களும்,அதிகாரிகளும் மனம் வைத்தால் எதுவும் சாத்தியமே!

  • மக்களும் சுற்றுச் சூழலை மனதில் நினைத்து, மனம் வைக்க வேண்டும். அபராதம் கட்டினால்தான் திருந்துவேன் என்பது அறிவுள்ள மனிதனுக்கு அழகாகாது.

அனைவரும் இணைந்து தேவையற்ற பிளாஸ்டிக்கை ஒழித்து, சுற்றுச் சூழலை மேம்படுத்தி, சுகாதாரமாக வாழ்ந்து, ஆயுளைப் பெருக்கி ஆனந்தமடைவோம்!

நீட்டுங்கள் கையை... என்னங்க யோசிக்கிறீங்க? சும்மா ஒரு 'ஹை ஃபை' சொல்லத்தாங்க...

Read Entire Article