பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது: 11,430 மாணவர்கள் ஆப்சென்ட்

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. மொழிப்பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இருப்பினும் 11,430 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதன் தொடர்ச்சியாக 5ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தொடங்க உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு மார்ச் 3ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு தொடங்கும், 5ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தொடங்கும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அறிவித்தபடி நேற்று பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு தொடங்கியது.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் 7518 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, மொழிப்பாடத்துடன் நேற்று தேர்வு தொடங்கியது. மாணவ மாணவியர் மகிழ்ச்சியுடன் தேர்வில் பங்கேற்றனர்.

முன்னதாக தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். முதல் நாளான நேற்று தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் தமிழ் பாடம் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வில் பங்கேற்றனர்.

தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்கள் உள்ள வளாகங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. குடிநீர், மின்சார வசதி, உள்ளிட்டவை செய்யப்பட்டு இருந்தன. தேர்வு எழுதும் மாணவ மாணவியர் தேர்வு அறையில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் குறித்து விளக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத வந்த மாணவ மாணவியர் கடுமையான சோதனைக்கு பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், செல்போன், உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் அனுமதி மறுக்கப்பட்டது. மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியர் தேர்வு எழுத வசதியாக கீழ்த் தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. மேலும் டிஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவ மாணவியர் சொல்வதை எழுதும் நபர்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிளஸ்2 தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரியில் 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறைக் கண்காணிப்பு பணியில் 43 ஆயிரத்து 446 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4470 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் 20,476 மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியருக்கு மொழிப்பாடத் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தேர்வை எழுத ஒரு மணி நேரம் கூடுதல் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் வந்ததும் விடைத்தாள் வழங்கப்படும். அதன் முகப்பு பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விவரங்களை எழுதும் வகையில் 5 நிமிட நேரமும், பின்னர் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. கேள்வித்தாள் படித்துப்பார்க்க 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த 15 நிமிடங்களுக்கு பிறகு விடை எழுதத் தொடங்கினர். மதியம் 1.15 மணி அளவில் தேர்வு முடிந்தது. இந்த தேர்வில் பதிவு செய்திருந்த மொத்த மாணவ மாணவியரில் 11,430 பேர் நேற்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. அதன்படி நேற்று மொத்தம் 8 லட்சத்து 2 ஆயிரத்து 568 பேர் பங்கேற்றனர்.மாணவர்கள், பொதுமக்கள் தேர்வு ெதாடர்பான தங்கள் புகார்கள் மற்றும் கருத்துகளையும், சந்தேகங்களையும் தெரிவிக்க வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

புகார்கள் தெரிவிக்க விரும்புவோர், 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்்பு கொள்ளவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுத் தேர்வில் குறைகள் இல்லாமல் நடப்பதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் இயங்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* நாகையில் அமைச்சர் ஆய்வு

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நாகப்பட்டினத்தில் பள்ளிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டு தேர்வு எழுத வந்த பள்ளி மாணவ மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னையில் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், தேர்வுத்துறை இயக்குநர் லதா, இயக்குநர் பழனிச்சாமி மற்றும் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் கல்வி அதிகாரிகள் சென்னை அசோக்நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் தேர்வு மையத்தை பார்வையிட்டனர். இதையடுத்து, 6ம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வு நடக்கிறது. இதற்கிடையே, 5ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது: 11,430 மாணவர்கள் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Read Entire Article