ARTICLE AD BOX
பில்லியனர்கள் காலம் மலையேறிவிட்டது.. டிரில்லியனராகும் முதல் 5 பேர் இவர்கள் தான்..!
உலகளவில் பணக்காரர்களின் எண்ணிக்கையும் அவர்களின் சொத்து மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் 5 தனி நபர்கள் டிரில்லினியர்கள் (1,000,000,000,000) என்ற அந்தஸ்தை பெறுவார்கள் என ஆக்ஸ்பேம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரு ட்ரில்லியன் என்பது ஓர் ஆயிரம் பில்லியனுக்கு சமம் அதாவது ஒன்றுக்கு பிறகு 12 பூஜ்ஜிங்கள் வருகின்றன.தற்போது உலக அளவில் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பது டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க். இவருடைய சொத்து மதிப்பு 449 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அதிபர் டிரம்புக்கு நெருக்கமானவராக இவர் இருக்கிறார். டொனால்ட் டிரம்பின் தேர்தல் பரப்புரைக்கு கணிசமான தொகையை இவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து தற்போது வரையில் இவரது சொத்தில் பல லட்சம் கோடிகள் சேர்ந்துள்ளன. உலகிலேயே முதல் டிரில்லினியர் என்ற பெருமையை எலான் மஸ்க் தான் பெறப்போகிறார் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் இரண்டாவது டிரில்லினியர் என்ற அந்தஸ்தை பெற இருக்கிறார். தற்போதைக்கு இவருடைய சொத்து மதிப்பு 251 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அமேசான் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களிலும் விண்வெளி தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அடுத்ததாக பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 215 பில்லியன் டாலர்கள் ஆகும். இவரது அடுத்த 10 ஆண்டுகளில் டிரில்லினியர் ஆகி விடுவாராம்.
அண்மைக்காலமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு நபராக என்விடியா நிறுவனத்தின் தலைவர் ஜென்சென் ஹூவாங் செயல்படுகிறார். இவருடைய நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு தேவையான சிப்புகளை தயாரித்து வழங்குகிறது. தற்போது இத்தகைய சிப்புகளுக்கான தேவை அதிகரித்து இவருடைய சொத்து மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவரும் கூடிய விரைவில் டிரில்லினியராகி விடுவார் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.
பெர்னார்ட் அர்னால்ட் உலக அளவில் ஆடம்பர ஃபேஷன் பொருட்களை விற்பனை செய்து வரக்கூடிய பெர்னார்டின் தற்போதைய சொத்து மதிப்பு 188.8 பில்லியன் டாலர்கள். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் . இவரும் விரைவில் டிரில்லினியராகி விடுவார் என சொல்லப்படுகிறது.
1990 களில் இருந்து தற்போது வரை உலக அளவில் பணக்காரர்களின் பட்டியல் அதிகரித்து இருந்தாலும் ஏழையாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என ஆக்ஸ்பேம் அறிக்கை குறிப்பிடுகிறது. எனவே இந்த இடைவெளியை போக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
Story written by: Devika