ARTICLE AD BOX

ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது 29 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஓபிசி பிரிவினருக்கு 42 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்திருந்தது. இதன் அடிப்படையில், முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியது.
இந்த மசோதாவின்படி, பிற்படுத்தப்பட்ட சாதியினர் அரசு வேலைகளில் மட்டுமல்ல, கல்வி நிறுவனங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அமைப்பு தேர்தல்களிலும் இந்த இடஒதுக்கீட்டைப் பெறுவார்கள். இந்த மசோதாவுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியைத் தவிர, எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பாஜகவும் ஆதரவு தெரிவித்தனர்.
இது தொடர்பான மூன்று மசோதாக்கள் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒன்றில் துணை சாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த விவாதத்திற்குப் பிறகு, முதல் இரண்டு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. மூன்றாவது மசோதா மீதான விவாதம் இன்று (மார்ச் 18) தொடர்ந்து நடைபெறுகிறது.
தெலுங்கானா அரசு நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பில், 56.33 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது, இதில் முஸ்லிம் சமூகத்தின் சாதிகளும் சேர்க்கப்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதற்காக இந்த மசோதா தயாரிக்கப்பட்டது.
42 சதவீத இடஒதுக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்கதுள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இடஒதுக்கீட்டின் வரம்பை அதிகரிக்குமாறு முறையிட வேண்டும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், மத்திய அரசு அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கும்போது மட்டுமே இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த முடியும். பிரதமர் மோடியுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் பண்டி சஞ்சய் குமார் ஆகியோரிடமும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.