ARTICLE AD BOX
ஒருவர் நம்மை விரும்புகிறார் என்ற உடனே அதற்கு ‘காதல்’ என்றுதான் அர்த்தம் என்பதில்லை. அன்பு, நட்பு, பாசம் என்று பல அர்த்தங்கள் உள்ளன. நம் மீதுள்ள விருப்பம் அவர்களிடமிருந்து எப்போது ‘எப்படி’ வெளிவருகிறது என்பதில்தான் அதன் முழு அர்த்தம் ஒளிந்திருக்கிறது. அப்படி ஒருவர் நம்மை விரும்புகிறார் என்பதை எப்படி உறுதி செய்யலாம்?
பொதுவான அறிகுறிகள்: (General Signs)
மிகத் தெளிவான அறிகுறிகளில் ஒன்று, ஒருவர் நமக்குக் கொடுக்கும் கவனத்தின் அளவு (amount of attention). அவர்கள் தொடர்ந்து நம்முடன் நேரத்தைச் செலவிடவும், நெடுநேர உரையாடல்களில் ஈடுபடவும், நம் வாழ்வில் உண்மையான அக்கறை காட்டவும் முயற்சி செய்தால் அவர்கள் நம்மை விரும்புகிறார்கள் என்பதற்கு ஒரு வலுவான உதாரணமாகும். அதுபோல அவர்களின் உடல் மொழியை வைத்தும் கண்டுபிடிக்கலாம். நம்முடன் பேசும்போது சுவற்றில் சாய்ந்துகொண்டு பேசுவதோ (leaning when we talk), பேசும்போது கண் தொடர்போடு இருப்பவரோ (maintaining eye contact) மற்றும் சில நேரங்களில் அவர்கள் நமது சைகைகளை பிரதிபலிப்பதுபோல் உணர்ந்தாலோ அதுவும் விருப்பத்தின் வெளிப்பாடே.
மற்றொரு பொதுவான அறிகுறி... நம்மை ஆதரிக்க (Support) அவர்கள் வெளிப்படுத்தும் விருப்பம். அவர்கள் எப்போதும் நமக்கு உதவி தேவைப்படும் நேரங்களில் கைகொடுக்கவோ, அழுவதற்கு தோள் கொடுக்கவோ, அல்லது நமது வெற்றிகளைக் கொண்டாடவோ முக்கியத்துவம் கொடுத்தால் அவர்கள் நம்முடன் ஆழ்ந்த உணர்ச்சி ரீதியான விருப்பம் கொண்டுள்ளார்கள் என்பதை தெளிவாக உணரலாம். கூடுதலாக, நம் முக்கியமான தேதிகளை நினைவில் வைத்துக்கொள்வது போன்றவை அவர்களின் விருப்ப உணர்வுகளை மேலும் பிரதிபலிக்கும்.
அறிய அறிகுறிகள் (Rare Signs):
நம்மைப் பற்றிய முக்கியமற்ற (insignificant details) சில விவரங்களை அவர்கள் நினைவில் வைத்துகொண்டு உங்களிடம் வெளிப்படுத்துவது ஒரு வகையான விருப்பத்தை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். இது நமக்குப் பிடித்த உணவை நினைவில் வைத்துக்கொள்வது போன்ற சிறிய விஷயமாகக்கூட இருக்கலாம் அல்லது நீங்கள் ஒரு முறை அவர்களிடம் பகிர்ந்த தற்செயலான உரையாடலாகக் கூட இருக்கலாம். இவை, நம் வாழ்வின் சிறிய அம்சங்களைக்கூட அவர்கள் விருப்பத்தின் பெயரில் உன்னிப்பாகக் கவனித்துக்கொள்கிறார்கள் என்பதற்கான உதாரணமே.
மற்றொரு அரிய அறிகுறி என்னவென்றால் அவர்கள் நம்மைக் கண்டதும் பதற்றம் அல்லது நடுக்கத்தை வெளிப்படுத்துவார்கள். இது நமக்கு பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், சில சமயங்களில் நம் மீது வலுவான விருப்பம் கொண்டவர்கள் நம் முன்னிலையில் இருக்கும்போது அவர்களை பற்றிய சுய உணர்வே (self-conscious) அவர்களைப் பதறச் செய்யும். இறுதியில் இது வேடிக்கையாக இருந்தாலும் இதுவும் ஒருவரின் விருப்பத்தின் அடையாளமே.
நீங்கள் மற்றவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் அசௌகரியமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தாலோ அல்லது நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நடுவில் வந்து பேச்சை திசைதிருப்புவது போன்றவையும் அந்தந்தச் சூழ்நிலைகேற்றார்போல் அவர்கள் வெளிப்படுத்துவதும், உங்கள் மீதுள்ள ஒரு வகையான விருப்பம்தான்.
பொதுவாக நம் மீது ஒருவர் வெளிப்படுத்தும் உணர்வுகளை அங்கீகரிப்பதில் அன்பும் பாசமும்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று நினைப்போம். ஆனால், இன்னொருபுறம் அந்தந்தச் சூழ்நிலைகேற்றார்போல் மேலே குறிப்பிட்ட சில அறிகுறிகளை வைத்து, நம் மீது ஒருவர் எப்படி தன்னுடைய உணர்வை வெளிப்படுத்துகிறார் என்பதை உணர்ந்து, அதற்கேற்றார்போல் நம் உணர்வை அவர்களுக்கு வெளிப்படுத்தி மகிழ்வாக இருப்போம்.