ARTICLE AD BOX
பிரதமர் பதவி போனா என்ன.. புதுசா 2 வேலைக்கு போகும் ரிஷி சுனக்..!
லண்டன்: பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமரும், இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்பு சில மாதம் ஒய்வெடுத்தார், இதன் பின்பு குடும்பத்துடன் பெங்களூருக்கும் வந்தார். இந்த நிலையில் ரிஷி சுனக் தனது அரசியல் பயணத்திற்கு பின்பு உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் வேலைக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் செயல்பட்டு வரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகங்களில் தனக்கு வேலை தயாராக இருக்கிறது என ரிஷி சுனக் தன்னுடைய சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரிஷி சுனக்கை பொறுத்தவரை இந்த இரண்டு பல்கலைகழங்களுமே அவரின் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்துள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் தான் ரிஷி சுனக் அறிவியல் மற்றும் பொருளாதார பிரிவில் பிஎச்டி படிப்பை முடித்தார். அதே போல ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் தான் தொழில் மேலாண்மை பிரிவில் முதுநிலை படிப்பை முடித்தார். அது மட்டுமல்ல இங்கு தான் அவர் தன் காதலியை சந்தித்தார்.
பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் , பிரிட்டன் பிரதமராகவும் கடந்த 2022ஆம் ஆண்டு 2024ஆம் ஆண்டு வரை இவர் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இவருக்கு கிடைத்தது. தற்போது ரிச்மாண்ட் பகுதி எம்பியாகவும் இவர் பதவியில் இருக்கிறார்.
ரிஷி சுனக்கை பொறுத்தவரை தேர்தல் தோல்வியை தொடர்ந்து அவர் அமெரிக்கா சென்று விடுவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த வதந்திகளுக்கு ரிஷி சுனக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் தொடர்ந்து பிரிட்டனிலேயே தங்கி இருக்க போகிறேன் என கூறியுள்ள அவர் இரண்டு பல்கலைகழகங்களில் பேராசிரியராக பணி புரிய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரத்திலான பல்கலைக்கழகங்களில் பணி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது ,இந்த புதிய பாதை எனக்கு மிகவும் ஆர்வம் தருகிறது என இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டேன்போர்டு பல்கலைகழங்களில் தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் இவர் பாடம் நடத்துவார் என சொல்லப்படுகிறது. இரண்டு பல்கலைக்கழகங்களும் இவருக்கு எந்த ஊதியமும் வழங்கப் போவதில்லை.
ஸ்டேன்போர்டு பல்கலைகழகம் இவருடைய போக்குவரத்து செலவுகள் மற்றும் தங்குமிட செலவுகளை கவனித்து கொள்ளும் என தெரிகிறது. ரிஷி சுனக்கை பொறுத்தவரை கலிபோர்னியாவுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கும் ஒரு நபர். கலிபோர்னியாவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தான் இவர் தன்னுடைய மனைவி அக்ஷதா மூர்த்தியை சந்தித்தார்.
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி - சுதா மூர்த்தி தம்பதியினர் மகள் அக்ஷதா மூர்த்தி தான் ரிஷி சுனக்கின் மனைவி. இந்த தம்பதிக்கு அனொஸ்கா மற்றும் கிருஷ்ணா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரிஷி சுனக் அக்ஷதா தம்பதிக்கு சொந்தமாக கலிபோர்னியாவில் 7.2 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட மிகப்பெரிய மாளிகை இருக்கிறது.