ARTICLE AD BOX
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 27-ந்தேதியுடன் விலகியது. வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை பெய்யக்கூடிய மழை அளவு வடகிழக்கு பருவமழையாக கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 33 சதவீதம் அதிகமாக பதிவாகியது. அதன்பிறகு பெய்யக்கூடிய மழை குளிர்கால மழையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி, கடந்த 1-ந்தேதி முதல் குளிர்கால மழை தமிழ்நாட்டில் ஆங்காங்கே பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடமாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழைக்கு இடையே பனிப்பொழிவின் தாக்கமும் இருக்கிறது. இதன் தாக்கம் அடுத்த மாதம் (பிப்ரவரி) இன்னும் அதிகமாகவே இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் பனிப்பொழிவு குறைவாக இருந்தது. லாநினா தற்போது இயல்பான பனிப்பொழிவு மீண்டும் திரும்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாகவே இருக்கிறது. பல இடங்களில் மழை போல் பனி கொட்டுவதை பார்க்க முடிகிறது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் பனிப்பொழிவின் தாக்கம் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதி வரை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகமாக இருக்கும் என்றும், அதிலும் மூடுபனியாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும் என நினைத்துவிட வேண்டாம். பகலில் வெயில் சுட்டெரிக்கும் என்றே தெரிவிக்கும் ஆய்வாளர்கள், வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்துக்கு பிறகு வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கும் போது, பனி விலகும் எனவும் கூறுகின்றனர்.