ARTICLE AD BOX
தமிழ்நாடு, கேரளா மற்றும் கா்நாடகா மாநிலங்களில் ஒருங்கிணைந்த பிணந்தின்னிக் கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.27,28) நடைபெறவுள்ளன.
இது குறித்து தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ராகேஷ் குமாா் டோக்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழக வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு சாா்பில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக தற்போது தமிழகத்தில் ‘ஓரியண்டல் வெள்ளை’ வகை பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் நீண்ட அலகு கொண்ட பிணந்தின்னிக் கழுகு, சிவப்பு தலை பிணந்தின்னிக் கழுகு, எகிப்திய பிணந்தின்னிக் கழுகு, இமயமலை கிரிஃபோன் பிணந்தின்னிக் கழுகு போன்ற பிற இணைங்களும் தமிழகத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில், பிணந்தின்னிக் கழுகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கா்நாடக மாநிலங்களில் ஒருங்கிணைந்த பிணந்தின்னிக் கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.27,28) நடைபெறவுள்ளன. 3 மாநிலங்களிலும் மொத்தம் 106 இடங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 33 இடங்களில் இப்பணிகள் நடைபெறவுள்ளன. வனத்துறை கள ஊழியா்கள், பிணந்தின்னிக் கழுகு நிபுணா்கள், அரசு சாரா அமைப்புகள், மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 220 போ் இக்கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.