ARTICLE AD BOX
-கலா ஞானசம்பந்தம்
தற்காலப் பெண்களின் படிப்பும் அறிவும் அவர்களது குடும்பங்களை அடையாளம் காட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது உண்மையே! ஆனால், அவர்களில் சில பெண்களின் வாழ்க்கை அவர்தம் பெற்றோர் நினைத்தபடி திருப்தியாக உள்ளதா? புகுந்த வீட்டுக்கு அவளால் பெருமையா? இந்த கேள்விக்குப் பதில், ஒரு பெண் தன் பெண்ணைச் சரியான முறையில் வளர்ப்பதில்தான் இருக்கிறது.
*உங்களது குழந்தைகளுக்குப் பிடித்த சாப்பாட்டை அன்பாகப் செய்து கொடுங்கள். 'இது இல்லையென்றால் அவளுக்கு கோபம் வந்துவிடும். வீட்டை ரகளை பண்ணி விடுவாள்' என்று அவர்கள் கோபத்துக்கு நீங்களே வித்திடாதீர்கள். கோபப்பட்டு ரகளை செய்தால் காரியம் கைகூடும் என்று ஆழ்மனத்தில் பதிந்துவிட்டால் எந்தத் தவறையும் துணிந்து செய்யத் தூண்டும்.
தோழிகளுடன் விளையாடும்போது, விட்டுக் கொடுத்து விளையாடப் பழக்குங்கள். உங்கள் பெண்ணுக்காக, பிறரை விட்டுக் கொடுக்கும்படி வாக்குவாதம் பண்ணாதீர்கள். தானே பெரிய ஆள் என்ற மமதை மனத்தில் பதிந்துவிடும்.
அத்தை, பாட்டி என்று உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுடன் அனுசரித்துப்போகப் பழக்குங்கள். அப்போதுதான், யார் வீட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று புரியும். பிற்காலத்தில் பிறரை அனுசரித்து நடக்க முடியும்.
என்னதான் வசதிப்படைத்தவர்களாக இருந்தாலும், செலவு செய்யும் விதத்தில் கண்டிப்பாக இருங்கள். செலவுக்குப் பணம் கொடுத்து அதற்கு கணக்கு கேளுங்கள். அப்போதுதான் தவறான வழியில் பணம் செலவழிப்பதைத் தவிர்க்க முடியும்.
கணவருக்குத் தெரியாமல் நீங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டு அதை மறைக்க, உங்கள் குழந்தைகளை சாட்சியாக்காதீர்கள். அப்போதே அவர்கள் உங்களை ஏமாற்ற வழிவகுத்து விடுவார்கள்.
ஒரு பெண்ணிடம் செல்ஃபோனையும்' கொடுத்து, வீட்டில் ஒரு தனி அறையையும் கொடுத்தால், அவளது இளம் மனது எப்படி வேண்டுமானாலும் மாறும். படிக்கும் நேரத்தைத்தவிர மற்ற நேரங்களில் தமையை நாடவிடாதீர்கள்.
உங்களுடைய பெண், எல்லா விதத்திலும் படு சூட்டிஇருக்கலாம். அதை பிறரிடம் சொல்லி மகிழலாம். உதாரணமாக "எங்க வீட்ல எல்லாமே எங்கப் பொண்ணுதாங்க. அப்பாவை விட அதிகம் சம்பளம் வாங்கறா. கம்ப்யூட்டரைப் பற்றி நமக்கு என்னத் தெரியும்? எல்லாமே அவள்தான்" என்று உங்களைத் தாழ்த்தி அவளைப் புகழ்ந்து அவளது தலை கனத்தை ஏற்றாதீர்கள். அதனால் நாம் என்ன நல்லது சொன்னாலும், 'உனக்கு என்ன தெரியும்" என்று அலட்சியப்படுத்தி விடுவாள். யானை தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதைப்போல் ஆகிவிடும் உங்கள் நிலை!
தாயின் அரவணைப்பு ஒரு பெண்ணுக்குத் தேவை. ஆனால், இனி எல்லாமே அவள் இஷ்டம்தான் என்று விடாதீர்கள். வீட்டில் எல்லோரும் அவள் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற சூழ்நிலையையும் உருவாக்காதீர்கள். இதை மீறினால் திருமணத்துக்குப் பின் மாமியார் வீட்டிலும் இதையே எதிர்பார்ப்பாள். அதற்கு மாறாக ஏதாவது நடந்தால், அதை அனுசரிக்கும் மனப்பக்குவம் அவளுக்கில்லாமல் போகிறது. எப்போதும் பால் பாயசத்தை மட்டும் சாப்பிடப் பழக்காதீர்கள். பழங்கஞ்சியையும் அவள் விரும்பிச் சுவைக்கட்டும்!
இளம் பெண்களுக்கு ஓர் அறிவுரை:
பெண்களை, ஆண்கள் காவல் புரிவதனால், பெண்மை தாழ்ந்ததன்று. மென்மையை, வன்மை காவல் புரியும். தங்கம் மென்மையானது. இரும்பு வன்மையானது. வன்மையான இரும்புப் பெட்டியில், மென்மையான தங்கத்தை வைத்துக் காப்பாற்றுவார்கள். காவலில் இருக்கும் தங்கம் தாழ்ந்ததென்று உலகம் கருதுகின்றதா?
உனக்கு சரி என்று பட்டதையே 'சரி' என்று முடிவு கட்டாதே. இன்று! 'சரி என்று உனக்கு தோன்றியதே நாளை 'தவறு' என்று தோன்றும். உனது அறிவு வளர்கின்ற அறிவு
பூரணமாக வளர்ந்து அருளறிவு பெற்ற தீர்க்கதரிசிகள், கூறிய நியதியையும், நியாயங்களையும் கடைபிடித்து வாழ்.
'சட்டியில் இருக்கும் வரைதான் அது சோறு, கீழே விழுந்தா அது பத்து' என்று குப்பையில் போட வேண்டியதுதான். அதே போல்தான் ஒரு பெண்ணின் வாழ்க்கையும். வாழ்க்கையைப் புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள். பழங்கஞ்சியும் பாயசமாய்த் தித்திக்கும்.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர், ஏப்ரல் 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்