ARTICLE AD BOX
பால் சப்ளையிலேயே கை வைக்கும் இந்தி திணிப்பு.. கொந்தளித்த தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம்!
சென்னை: இந்தி மட்டுமல்ல வலுக்கட்டாயமாக திணித்தால் ஆவின் தயிர் கூட வாந்தியெடுக்க வைக்கும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலுக்கட்டாயமாக ஆவின் தயிர் வாங்கியே ஆக வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்திப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம், ஆவின் அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் காலை, பிற்பகல் என இருவேளைகளில் சுமார் 9லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளும், மாதாந்திர அட்டை மூலம் சுமார் 7லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளும் என மொத்தம் 16லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பால் முகவர்களுக்கு மொத்த விநியோகஸ்தர்கள் தினசரி விநியோகம் செய்யும் ஆவின் பால் பாக்கெட் அளவில் பிப்.25 முதல் 500கி ஆவின் தயிர் பாக்கெட்டுகள் 2% கட்டாயமாக வாங்கியே ஆக வேண்டும் என அதிகாரபூர்வ கடிதம் ஏதும் கொடுக்காமல் மொத்த விநியோகஸ்தர்களுக்கான விற்பனை பிரிவு வாட்ஸ் அப் குழு மூலம் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணை துணைப்பொது மேலாளர்கள் விநியோகஸ்தர்களை நிர்பந்தம் செய்து வருவது தெரிய வந்துள்ளது.
கட்டாயமான தயிர் வாங்க நிர்பந்தம்
அதுமட்டுமின்றி மொத்த விநியோகஸ்தர்கள் ஆவின் பால் பண்ணையில் தினசரி கொள்முதல் செய்யும் பால் பாக்கெட்டுகள் அளவில் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் 2% ஆவின் தயிர் பாக்கெட்டுகளை வலுக்கட்டாயமாக பில் போடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆவின் அதிகாரிகளின் இந்த போக்கின் காரணமாக மொத்த விநியோகஸ்தர்களும் பால் முகவர்களிடம் ஆவின் தயிர் பாக்கெட்டுகளை வலுக்கட்டாயமாக திணித்து வருவதால் பால் முகவர்கள் துயருக்கு ஆளாகி வருகின்றனர்.
பால் முகவர்கள் சங்கம் கண்டனம்
இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில், பொதுமக்கள் தரப்பிலிருந்தும், சில்லறை வணிகர்கள் தரப்பிலிருந்தும் ஆவின் பாலினை விரும்பி வாங்கும் அளவிற்கு ஆவின் தயிர் பாக்கெட்டுகளை விரும்பி வாங்குவதில்லை. காரணம் தனியார் பால் நிறுவனங்களின் தயிரை விட ஆவின் தயிரின் தரம் மிக மோசமாக இருப்பதுதான்.
தயிரின் தரம் குறைவு
தயிர் பாக்கெட்டுகளின் Self Life குறைவாக இருப்பதால் அவை விநியோகம் செய்யப்பட்டு குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்தாலும் கூட மறுநாளே தயிரில் புளிப்பு அதிகமாகி, தயிர் பாக்கெட்டுகள் பலூன் போல உப்பி விரைவில் கெட்டுப் போகிறது. அவ்வாறு கெட்டுப் போகும் தயிர் பாக்கெட்டுகளை மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் திருப்பித் தந்து மாற்றித் தருமாறு கேட்டால் ஆவின் தரப்பிலிருந்து மாற்றி தந்து அதன் இழப்பை ஈடுசெய்ய மறுக்கப்படுகிறது.
பால் முகவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
இதனால் வேறு வழியின்றி கெட்டுப்போன 500கி ஆவின் தயிர் பாக்கெட்டுகளோடு தங்களின் வாழ்வாதாரத்தையும், உழைப்பையும் கண்ணீரையும் சேர்த்து குப்பையில் கொட்டும் சூழலுக்கு பால் முகவர்கள் தள்ளப்பட்டு வருவதால் ஆவின் தயிர் பாக்கெட்டுகளால் பால் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது. ஏற்கனவே ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை பல ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றம் செய்யாமல் வாழ்வாதாரத்தை அபகரித்து வரும் ஆவின் அதிகாரிகள், தயிர் பாக்கெட்டுகளையும் வாங்க கட்டாயப்படுத்தி நிர்பந்தம் செய்து, இழப்பை ஏற்படுத்துவதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தி திணிப்பு மட்டுமல்ல..
இந்தியையும், தேவையற்ற உணவுகளையும் மட்டுமல்ல ஆவின் தயிரையும் வலுக்கட்டாயமாக திணித்தால் அது வாந்தியெடுக்கவே வைக்கும் என்பதால் அதனை ஆவின் நிர்வாகம் உணர்ந்து கொண்டு பால் முகவர்கள் தினசரி வாங்கும் பாலின் அளவில் 2% ஆவின் தயிர் பாக்கெட்டுகள் வாங்கியே ஆக வேண்டும் என மொத்த விநியோகஸ்தர்களை வலுக்கட்டாயமாக நிர்பந்தம் செய்வதை உடனடியாக கைவிட வேண்டும். ஆவின் தயிர் பாக்கெட்டுகளை வலுக்கட்டாயமாக திணிக்கும் செயலில் ஆவின் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டால், ஒட்டுமொத்தமாக ஆவின் பால் விற்பனையை புறக்கணிக்கும் முடிவை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெடுக்கும் என எச்சரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதுமே.. அறநிலையத் துறை வேலைவாய்ப்பு! இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு!
- வெயிலுக்கு மத்தியில் ராமேஸ்வரத்தில் வெளுத்துக் கட்டிய மழை.. 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பதிவு!
- திண்டுக்கல் அருகே பெண்ணின் ஆடையை உருவி.. 24 வருடம் கழித்து கலங்கிய போலீஸ்.. சென்னை நபருக்கும் தண்டனை
- Gold Rate Today: ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?
- Gold Rate Today: ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?