ARTICLE AD BOX

இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'லியோ' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'மகாராஜா' படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ரைபில் கிளப்' படத்திலும் நடித்துள்ளார். வெற்றிமாறனின்'விடுதலை 2' படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையில், அனுராக் காஷ்யப், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படம் நேரடி இந்தி படமாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது.

தேவ் டி , அக்லி , பாஞ்ச் , பிளாக் ப்ரைடே , கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் அனுராக் கஷ்யப். இவரது பல படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்டுள்ளன. இரண்டு பாகங்களாக இவர் இயக்கிய கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்த திரைப்படம். பாலிவுட் சினிமாவையும் பாலிவுட் நடிகர்களின் மீதும் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அனுராக் கஷ்யப். தரமான படங்களை இயக்கியும் தனது படங்களை வெளியிட பல சவால்களை சந்தித்து வந்த அனுராக் காஷ்யப் தென் இந்திய சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேற இருப்பதாக அனுராக் கஷ்யப் அதிர்ச்சியளித்தார். "என் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் சூழல் இருக்கும் தென் இந்திய சினிமாவிற்கு போகப்போகிறேன்" என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவர் பாலிவுட் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது பாலிவுட் சினிமாவின் மீதான விரக்தியால் மும்பையில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ள இவர் பாலிவுட் திரையுலகம் 'டாக்சிக்'காக மாறிவிட்டதால் தான் அதிலிருந்து விலகுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனுராக் காஷ்யப் மும்பையில் இருந்து வெளியேறி பெங்களூருவில் குடியேறலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.