ARTICLE AD BOX
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருப்பூரில் இருந்து சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளம்பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கோவையில் 17 வயது சிறுமி ஒருவர், தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஏழு மாணவர்களால் கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக வெளியான செய்திகள் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மேலும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியிருப்பது தமிழகத்தில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த தமிழகத்தில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் சூழல்தான் நிலவிக் கொண்டிருக்கிறது.
அப்பா… அப்பா… என யாரோ எழுதிக் கொடுத்ததை பல நாட்கள் பயிற்சி எடுத்து ஒப்புவிக்கும் நேரத்தில் தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவதில் கவனம் செலுத்தியிருந்தால் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பாதியளவு குறைந்திருக்கும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, இனியாவது விளம்பர மோகத்திலிருந்து வெளியே வந்து தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, அதற்கு முதன்மைக் காரணமாக திகழும் கஞ்சா உள்ளிட்ட கொடிய வகைப் போதைப்பொருட்களை அடியோடு ஒழித்திடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.