ARTICLE AD BOX
பாதாம் பருப்புகள் (Almond) நம் உடலுக்கு பல வகையான ஊட்டச் சத்துக்கள் அளிக்கக்கூடிய ஒரு தாவர வகைக் கொட்டை. இதை உண்பவர்கள் அதன் மீதிருக்கும் பிரவுன் நிற தோலைப் பிரித்து தூர எறிந்து விடுகின்றனர். நம்ப முடியாத அளவுக்கு ஆல்மண்ட் தோலிலிருக்கும் நன்மைகளை அறியாமலே அவ்வாறு செய்கின்றனர். தினசரி வாழ்வில் ஆல்மண்ட் தோலிலிருந்து ஐந்து நன்மைகளை எவ்வாறு பெறலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. அதிகளவு ஊட்டச் சத்துகள்: ஆல்மண்ட் தோலில் டயட்டரி நார்ச்சத்து, பாலிஃபினால்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மிக அதிகம். இத்தோலை நன்கு உலரச் செய்து பவுடராக்கிக் கொள்ளலாம். அதிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து காலை உணவில் ஸ்மூத்தியுடன் கலந்து உண்ணும்போது உடலுக்கு நார்ச்சத்து கிடைப்பதோடு உணவுக்கு நட்டி ஃபிளேவரும் கிடைக்கும். ஆல்மண்ட் தோல் பவுடரை குக்கீஸ், கேக்ஸ், மஃப்பின் போன்றவற்றின் தயாரிப்பில் சேர்த்து பேக் செய்யும்போது அவ்வுணவுகளிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து அதிகரிக்கும். காலை உணவுகளான செரியல், ஓட்மீல், யோகர்ட் போன்றவற்றின் மீது ஆல்மண்ட் தோல் பவுடரை தூவியும் உண்ணலாம்.
2. எக்ஸ்ஃபோலியேடிங் ஸ்கிரப் தயாரிக்க உதவும்: உலரச் செய்த ஆல்மண்ட் தோலை கொர கொரப்பான பவுடராக்கி தேன், தேங்காய் எண்ணெய் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட்டாக்கி சில நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உரித்தெடுக்கப்பட்டு சருமம் புதுப் பொலிவு பெறும். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த ஸ்கிரப்பை சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களும் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை உபயோகித்து நல்ல பயன் பெறலாம்.
3. டீ தயாரிக்க உதவும்: ஆல்மண்ட் தோலை தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் கொதிக்க வைத்து, பின் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதில் தேன், ஒரு துண்டு பட்டை அல்லது இஞ்சித் துண்டு சேர்த்து டீ தயாரித்து அருந்தலாம். சுவையான இந்த டீயிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கங்களைக் குறைக்கவும், செரிமானத்தை சிறப்பாக்கவும், உடலின் மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். காஃபின் இல்லாத இந்த சிம்பிள் டீ, ஆல்மண்ட் தோலை சிறந்த முறையில் உபயோகிக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உபயோகப்படுகிறது.
4. சூப் மற்றும் சாஸ் வகைகளை கெட்டியாக்க உதவும்: நார்ச்சத்து மிகுந்த ஆல்மண்ட் தோலை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துப் பேஸ்ட்டாக்கி சூப், சாஸ், ஸ்டூ போன்றவற்றுடன் சேர்த்துக் கலந்தால் அவற்றின் டெக்ச்சர் கூடுவதோடு அதிகப்படியான நார்ச்சத்து, மக்னீசியம் மற்றும் கால்சியம் சத்தும் கிடைக்கும். தக்காளி, பூசணிக்காய் அல்லது காலிபிளவர் உபயோகித்துத் தயாரிக்கப்படும் க்ரீமி சூப்களில் இந்தப் பேஸ்ட்டை சேர்க்கையில் அவற்றிற்கு ஒரு நட்டி ஃபிளேவர் கிடைக்கும்.
5. உங்கள் தோட்டத்திற்கு உரம் தயாரிக்க உதவும்: ஆல்மண்ட் தோலை சிறு சிறு துண்டுகளாக்கி மற்ற சமையலறை வெஜிடபிள் கழிவுகள், உலர்ந்த இலைகள், புல் ஆகியவற்றுடன் கலந்து மக்கச் செய்து உரம் தயாரிக்கலாம். இந்த பயோ டீகிரேடபிள் ஆர்கானிக் உரத்தை மண்ணுடன் கலந்து செடிகளுக்குப் போடும்போது சமமான ஊட்டச்சத்துடன் தொடர்ந்து செடிகள் செழித்து வளர இந்த உரம் பயன்படும்.
நாமும் இனி ஆல்மண்ட் தோலை தூக்கி எறிந்துவிடாமல் மேற்கூறிய முறையில் பயன்படுத்தி பலனடைவோம்.