ARTICLE AD BOX
மத்திய அரசின் தொகுதி சீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மார்ச் 5ஆம் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டியுள்ளது. பாஜகவும், தமிழ் மாநில காங்கிரஸும் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

தொகுதி சீரமைப்பு பணியை மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள தொகுதிகள் குறையும் என கூறப்படுகிறது. குறிப்பாக 39 தொகுதிகளில் 8 தொகுதிகள் குறைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியானது. மேலும் தென் மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கையை பொறுத்து தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டது.
இதனால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறைந்தும், வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகாரம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தமிழக அரசு சார்பாக வருகிற மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை தமிழக பாஜக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்ற தகவலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் என்ற தகவலை, பொதுமக்களுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டீர்கள்.
இது முழுக்க முழுக்க நீங்கள் பரப்பும் கற்பனையான மற்றும் ஆதாரமற்ற அச்சம் என்பதால், மார்ச் 5ம் தேதி அன்று கூட்டப்படவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதே போல பாஜகவை தொடர்ந்து தமிழக அரசு கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது என ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூம்மொழிக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமான மத்திய அரசின் கல்வி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதராவாகவே இருக்கிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் எந்த அதிகார பூர்வமான அறிவிப்பும் வராத நிலையில், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.

கடந்த வாரம் 25.02.2025 தமிழகத்திற்கு வருகை தந்த, மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள், தொகுதி மறுசீரமைப்பில் எந்த நிலைப்பாட்டையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்படி இருந்தாலும் தமிழகத்திற்கு பாராளுமன்ற தொகுதிகள் கூடுமே தவிர குறையாது என்றும் தெளிவுப்படக் கூறியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் தொடர்ந்து வளர்ந்துகொண்டு இருக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கும் பொழுது, அதையெல்லாம் மக்களிடம் இருந்து திசைத் திருப்பவே இக்கூட்டம் நடைபெறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது. வருகிற மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் -மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்கவில்லை என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.