ARTICLE AD BOX
நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை. பணம் கொடுத்து விமர்சனம் செய்யத் தேவை இல்லை. மக்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும். இந்த வரிகளை நிரூபித்து காட்டி இருக்கிறது “மர்மர்” திரைப்படம். முதல் நாளில் வெறும் 30 திரைகளில் மட்டுமே வெளியான இப்படம் தற்போது 300-க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. அத்துடன், முதல் வாரத்திலேயே 2.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது
ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் மார்ச் 7-ம் தேதி வெளியான படம் ‘மர்மர்’. புதுமையான வகையில் சொல்லப்பட்ட இப்படத்தின் திகில் கதைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் ‘மர்மர்’ படம் ஹவுஸ்ஃபுல்லாக செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஒன்லைன் என்ன?
அட்வெஞ்சர் வீடியோக்கள் வெளியிட்டு ‘வியூஸ்’ அள்ளும் யூடியூபர்கள், முழுநிலா நாளில் குழுவாக ஜவ்வாது மலை காட்டுப் பகுதிக்கு மலைக்கிராமத்துப் பெண் உதவியுடன் செல்கிறார்கள். காட்டின் நடுவில் இருக்கும் குளத்தில் குளிக்க வரும் சிறுதெய்வங்களான ‘சப்த கன்னியர்’-களையும் அவர்களைத் தடுக்கும் மங்கை என்கிற ஆவியையும் கேமராவில் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம்.
அதை அவர்களால் சாதிக்க முடிந்ததா?, அவர்கள் உயிரோடு வீடு திரும்பினார்களா? என்பது தான் திரைக்கதை. இப்படம் பார்வையாளர்களுக்குத் தரமான முறையில் பயம் காட்டியிருக்கிறது என விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களின் பேராதரவை பார்த்து, தற்போது 300-க்கும் மேற்பட்ட திரையரங்கில் திரையிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் சைலண்ட் ஹிட் படமாக மர்மர் மாறி வருகிறது. இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.