ARTICLE AD BOX
இந்தியத் திரையுலகில் புதியதொரு சகாப்தத்தைத் தொடங்கி வைத்த திரைப்படம் பாகுபலி. இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தான், பான் இந்தியத் திரைப்படங்கள் அதிகரிக்கத் தொடங்கின. தெலுங்கில் மட்டுமே படங்களை இயக்கி வந்த ராஜமௌலி, இந்திய அளவில் பிரபலமானது கூட பாகுபலி படத்திற்கு பிறகு தான். அதன்பிறகு இவர் இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்தன. பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி வரும் ராஜமௌலிக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் ஒரு தமிழ் இயக்குநர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஒருசில ஆண்டுகளுக்கு முன் இந்தியத் திரையுலகில் பெரிய பட்ஜெட் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய பட்ஜெட்டில் பல படங்கள் உருவாகின்றன. இதற்கெல்லாம் முதலில் அடித்தளமிட்டவர் ஒரு தமிழ் இயக்குநர் தான். இன்று இந்த கலாச்சாரம் பான் இந்திய அளவில் விரிவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார் ராஜமௌலி.
கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாகுபலி திரைப்படம், இந்தியத் திரையுலகின் புதிய மைல் கல்லாக பார்க்கப்பட்டது. சரித்திரப் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணமும் இயக்குநர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. அதற்கேற்ப தமிழில் பொன்னியின் செல்வன், கன்னடத்தில் காந்தாரா, தெலுங்கில் ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் பான் இந்திய அளவில் வெற்றி பெற்றன.
இன்று பல படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், பிரம்மாண்ட இயக்குநர் சங்கர்தான் இதற்கு முதலில் விதை போட்டவர். பெரிய பட்ஜெட் படங்கள் என்றாலே முதலில் சங்கர் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுத்து வெற்றி கண்டவர். இவரைப் பார்த்து தான், பெரிய பட்ஜெட்டில் தான் படமெடுக்கவே திட்டமிட்டேன் என இயக்குநர் ராஜமௌலி சமீபத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் உதவி இயக்குநராக பணிபுரிந்த சமயம், சங்கர் சார் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். நான் மட்டுமின்றி என்னோடு பணிபுரிந்த பல உதவி இயக்குநர்களுக்கு சங்கர் சார் இன்ஸ்பிரேஷனாக இருந்தார். நாம் நினைப்பதை ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக சொல்ல முடியும் என்றால், பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தவர் இவர் தான். இந்த நம்பிக்கையில் விளைந்த முத்துக்கள் தான் பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள்” என ராஜமௌலி தெரிவித்தார்.
ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன் மற்றும் நண்பன் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை சங்கர் இயக்கியுள்ளார். எந்திரன், 2.O, இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட பல படங்களை அதிக பட்ஜெட்டில் சங்கர் இயக்கியுள்ளார். இந்தியன் 2 பெரிய வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தியன் 3 திரைப்படத்தின் மூலம் சங்கர் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.