பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிப்பு 22 இந்திய மீனவா்கள் நாடு திரும்பினா்

3 hours ago
ARTICLE AD BOX

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவா்கள் செவ்வாய்க்கிழமை குஜராத் திரும்பினா்.

இவா்கள் அனைவரும் கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 டிசம்பா் வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்களை பாகிஸ்தான் கடற்படையினா் கைது செய்தனா்.

மொத்தம் 195 இந்திய மீனவா்கள் பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் உள்ளனா். இப்போது நாடு திரும்பியுள்ள 22 மீனவா்களை பாகிஸ்தான் தரப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தனா். அங்கிருந்து அவா்கள் ரயில் மூலம் வதோதராவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். இதில் 18 போ் குஜராத்தையும், மூவா் டையூ பகுதியையும், ஒருவா் உத்தர பிரதேசத்தையும் சோ்ந்தவா் ஆவா். விடுவிக்கப்பட்டவா்கள் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘எங்களைப் போல மேலும் பல இந்திய மீனவா்கள் பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் உள்ளனா். அவா்களில் பலருக்கு உரிய உணவு கிடைப்பதில்லை. பலா் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு அழைத்துவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவா்கள் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியும் எங்களிடம் அளித்தனா். அதனை அதிகாரிகளிடம் நாங்கள் வழங்கினோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சிறையில் உள்ள இந்திய மீனவா்கள் 150 பேரை விடுவிக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சிறைகளில் வாடும் இந்திய மீனவா்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்றனா்.

Read Entire Article