ARTICLE AD BOX
பலுசிஸ்தானில் பலூச் விடுதலைப் படை (BLA) ஜாஃபர் எக்ஸ்பிரஸைக் கடத்தியது உட்பட, சமீபத்திய நிகழ்வுகளால் பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசைக் கவிழ்க்க ஒரு சதித்திட்டம் தீட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
பர்வேஸ் முஷாரப் பாணியில் அசிம் முனீர்:
பாகிஸ்தான் ஊடகங்களில் பரவி வரும் தகவல்களின்படி, ஜெனரல் அசிம் முனீர் பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப் பாணியில் அரசுக்கு எதிராக திட்டம் போடுவதாகத் தெரிகிறது. பலூச் விடுதலைப் படை மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) தொடர்புடைய சமீபத்திய பயங்கரவாத சம்பவங்கள், ஆப்கானிஸ்தான் தாலிபானுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் ஆகியவற்றை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு எதிராக திசை திருப்ப முயல்வதாகக் கூறப்படுகிறது.
பயங்கரவாதத் தாக்குதல்களையும் பொருளாதார மந்த நிலையையும் எதிர்த்துப் போராடி வரும் வேளையில், பாகிஸ்தானில் மற்றொரு ஆட்சிக் கவிழ்ப்புக்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன என நிபுணர்கள் கருதுகின்றனர்.
பலுச் விடுதலைப் படையின் எழுச்சி இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பலுச் விடுதலை படை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக ஜெனரல் முனீர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மீது விமர்சனங்களை முன்வைத்தார். பாகிஸ்தானில் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது என்றும் அதற்கு அரசியல்வாதிகளே காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். ஷெபாஸ் ஷெரீப்பின் அரசாங்கம் பலவீனமாக உள்ளது என்றும் ராணுவத் தலைவர் முனீர் விமர்ச்சித்துள்ளார்.
பலவீனமான ஷெபாஸ் ஷெரீப் அரசு:
கூட்டு நாடாளுமன்றக் குழுவில் உரையாற்றிய ஜெனரல் அசிம் முனீர், பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சியை எதிர்த்துப் போராட நாட்டிற்கு சிறந்த நிர்வாகம் தேவை என்று கூறினார். மேலும் பாகிஸ்தானை உறுதியான நாடாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பலவீனமான நிர்வாகத்தின் காரணமாக அப்பாவி பாகிஸ்தான் குடிமக்கள் எவ்வளவு காலம் பயங்கரவாதத்திற்குப் பலியிடப்படுவார்கள் என்று கேள்வ எழுப்பினார்.
ஜெனரல் முனீரின் பேச்சு அவர் முன்னாள் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப்பின் வழியில் செல்வதைக் காட்டுவதாக பாகிஸ்தான் அரசியலை அறிந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முஷார்ஃப் பின்பற்றிய அதே தந்திரங்களைப் பயன்படுத்தி ஷெபாஸ் ஷெரீப்பின் அரசைக் கவிழ்க்க முயல்வதாகத் தெரிகிறது.
ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக ராணுவக் கிளர்ச்சியைத் தூண்டிய முஷாரப், அதன் மூலம் நாட்டின் சர்வாதிகாரியாகவும் மாறினார். 25 ஆண்டுகளுக்கு முன்பு கார்கில் போரில் தோல்வி அடைந்ததற்காக நவாஸ் ஷெரீப்பை குற்றம் சாட்டி முஷாரஃப் ஆட்சியைக் கைப்பற்றினார். அதேபோல பலூச் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதல்களுக்கு ஷெபாஸ் ஷெரீப்பை குற்றம் சாட்டுகிறார் அசிம் முனீர்.
பலுச் கிளர்ச்சிக் குழுவின் எழுச்சி:
ஷெபாஸ் ஷெரீஃப் தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பிற்கு ஏற்பட்ட அதே கதியை சந்திக்கும் அதிக வாய்ப்பு அதிகம் உள்ளது. பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான தலைமை தேவை என்ற தெளிவான செய்தியை அசிம் முனீர் வெளியிட்டுள்ளார். தற்போதைய ஆட்சியில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளை எதிர்த்துப் போராடுவதைத் தடுக்க இயலாததால், ராணுவ ஆட்சிதான் பதில் என்று முனீர் மறைமுக உணர்த்தி இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்க ஜெனரல் அசிம் முனீர் பலூச் கிளர்ச்சி குழுவை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அக்டோபர் 12, 1999 அன்று, அப்போதைய ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப், நவாஸ் ஷெரீப்பை ஆட்சியிலிருந்து அகற்றி அதிகாரத்தைக் கைப்பற்றினார். கார்கில் போரில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை ஷெரீப் அரசுகுக எதிராகத் திருப்பினார் முஷாரஃப். அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஷெரீப் அடிபணியாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் கார்கில் போரில் வெற்றி பெற்றிருக்கும் என்று முஷாரஃப் கூறினார்.