ARTICLE AD BOX
பாகிஸ்தானில் நடப்பாண்டில் (2025) புதியதாக மற்றொரு நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிந்து மாகாணத்தின் மாலிர் மாவட்டத்திலுள்ள ஜின்னா முதுகலை மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் கல்லூரியின் மருத்துவ அதிகாரி யஹியா துனியோ கூறுகையில், தற்போது குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு 2 நாள்களுக்கு முன்பு உடலில் உண்டான கொப்புளங்களினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரை தற்போது தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹெபடைடிஸ் - சி பாதிப்பும் அவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது உடல்நிலை முன்னேறி வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், அந்த நபரின் மனைவி சமீபத்தில் சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியதாகவும் அவரது உடலிலும் இதேபோன்ற கொப்புளங்கள் உண்டாகி பின்னர் குணமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் மூத்த அரசியல் தலைவர் பலி!
இதனைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதினால் அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அந்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் எல்லை நுழைவு இடங்களில் திரையிடல் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பாகிஸ்தானின் பெஷாவர் வந்தடைந்த பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் 8 குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்த பாதிப்புகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பயணிகளிடம் மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில் உள்நாட்டில் அந்த தொற்றின் பரவல் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.