ARTICLE AD BOX
பவர் பேங்குகளுக்கு எதிராக விமான நிறுவனங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கேவின் பட்லர்
- பதவி, பிபிசி செய்திகள்
- 4 நிமிடங்களுக்கு முன்னர்
தென் கொரியாவில் ஏர்பஸ் ஏ321 விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.
ஒரு பவர் பேங்க்-ஆல் தீ விபத்து ஏற்பட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 28, 2025 அன்று ஏர் பூசன் பயணிகள் விமானம் தீப்பிடித்தது. இதில் மூன்று பேர் லேசான காயமடைந்தனர்.
தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் மார்ச் 14 அன்று, விசாரணையில் பவர் பேங்க் செயலிழந்திருப்பது தெரியவந்ததாகக் கூறியது. அதன் காரணமாக விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
பயணிகள் அமரும் இருக்கைக்கு மேலே உள்ள உடைமைகள் வைக்கும் பகுதியில் பவர் பேங்க் இருந்தது. அங்குதான் முதலில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
தாங்கள் கண்டுபிடித்த பவர் பேங்கில் தீப்பற்றியதற்கான தடயங்கள் இருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், பவர் பேங்கின் பேட்டரி ஏன் சேதமடைந்தது என்று தெரியவில்லை.
முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ஒரு இடைக்கால விசாரணை அறிக்கை மட்டுமே. விமானத்தின் இறுதி விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

2016 முதல் தடை
உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக, செக் இன் உடைமைகளுடன் (விமானத்தில் ஏறுவதுக்கு முன்பு ஒப்படைக்கும் உடைமைகள்) பவர் பேங்குகளை எடுத்துச் செல்ல பல ஆண்டுகளாக தடை விதித்துள்ளன.
பவர் பேங்குகளில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.
இந்த பேட்டரிகள் கடுமையான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவை. மேலும் அதில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளிட்ட அறிவுரைகளின்படி, 2016 ஆம் ஆண்டு முதல் பயணிகள் விமானத்தின் செக் இன் உடைமைகளுடன் எந்த வித லித்தியம்-ஐயன் பேட்டரிகளையும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தென் கொரியாவில் ஏர்பஸ் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, ஏர் பூசன் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. பயணிகள் விமானத்தின் உள்ளே இருக்கைகளுக்கு கொண்டு செல்லும் உடைமைகளில் பவர் பேங்க்குளை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
பவர் பேங்குகள் அதிக வெப்பமாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - எப்போது திரும்புவார்?5 மணி நேரங்களுக்கு முன்னர்

பட மூலாதாரம், Reuters
அதே நேரத்தில், சீனா ஏர்லைன்ஸ் மற்றும் தாய் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் இதே போன்ற விதிகளை அமல்படுத்துகின்றன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விலைக்குறைவான விமான சேவை பிரிவான ஸ்கூட், ஏப்ரல் 1 முதல் விமானங்களில் பவர் பேங்க்குளைப் பயன்படுத்தவும், சார்ஜ் செய்யவும் தடை செய்ய உள்ளது.
நாட்டில் விமானங்களில் ஏறும் பயணிகள், கையில் எடுத்து செல்லும் பேட்டரிகள் மற்றும் சார்ஜர்களை இருக்கைக்கு மேலே உள்ள உடைமைகள் வைக்கும் பகுதியில் வைக்காமல், தங்களுடன் வைத்துக்கொள்ளுமாறு பிப்ரவரி 28 அன்று, தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.
லித்தியம் பேட்டரிகளால் கப்பல்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்ட சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்துள்ளன.
மார்ச் 2017 இல், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து பெய்ஜிங்கிற்குச் சென்ற விமானத்தில் ஒரு பெண்ணின் ஹெட்ஃபோன்கள் வெடித்தன.
இதனால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. தனது ஹெட்ஃபோன்கள் வெடிக்கும் சத்தம் கேட்டு எழுந்த அந்தப் பெண், உடனடியாக அவற்றைக் கழற்றி தரையில் வீசினார்.
விபத்துக்குப் பிறகு, லித்தியம் அயன் பேட்டரியில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
முன்னதாக, சிட்னியில் ஒரு விமானத்தில் உடைமைகள் வைத்திருந்த பகுதியில் இருந்து புகை வெளியேறியதைக் கண்டதால் விமானம் நிறுத்தப்பட்டது.
பின்னர் உடைமைகளில் வைக்கப்பட்டிருந்த லித்தியம் அயன் பேட்டரி தீப்பிடித்து எரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
குப்பைக் கிடங்குகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் 700க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக பிரிட்டன் சுற்றுச்சூழல் சேவைகள் சங்கம் 2022 ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை தூக்கி வீசப்படும் லித்தியம் பேட்டரிகளால் ஏற்படுகின்றன.
லித்தியம் அயன் பேட்டரிகள் சேதம் ஏற்பட்டாலோ அல்லது உடைந்தாலோ வெடிக்கக்கூடும். இந்த பேட்டரிகள் பவர் பேங்குகளில் மட்டுமல்ல, பல் துலக்கும் பிரஷ்கள், பொம்மைகள், மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)