பள்ளிச் சிறுவன் பேப்பர் பையன்... இது சரியா?

2 hours ago
ARTICLE AD BOX

பள்ளிப் பருவத்தில் பணம் சம்பாதிப்பது சரியா?

சில நாட்களாக செய்தித்தாள் எனக்கு நேரம் தப்பியும், அல்லது சில நாள் வராமலேயும் போய்க் கொண்டிருந்தது. எனக்கு பேப்பர் போடும் கடைக்காரரிடம் தொலைபேசியில் முறையிட்டபோது, ‘‘இல்லையே சார், நேரத்துக்கு அனுப்புகிறேனே…‘‘ என்று அவர் சொன்ன பதில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இடையில் எங்கே தவறு நிகழ்கிறது?

காலையில் குறிப்பிட்ட நேரத்தில் வாசல் கதவைத் திறந்தால் வெளிவாசல் கதவுக்குக் கீழே நாளிதழ் இருக்கும். நான் எடுத்துக் கொண்டு வந்துவிடுவேன். யார் கொண்டுவந்து போடுகிறார்கள் என்று பார்ப்பதில்லை. இப்போது தனக்காக கொஞ்சம் முன்கூட்டியே வாசலுக்கு வந்து கண்காணிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டார் கடைக்காரர்.

அதன்படி நான் மறுநாளே வாசலில் காத்திருந்தேன். ஒரு சிறு பையன், அதிகபட்சம் பத்து, பன்னிரண்டு வயதிருக்கும். தன் சைக்கிள் கேரியரில் செய்தித் தாள்களை அடுக்கிக் கொண்டு ஒவ்வொரு வீடாகப் போட்டுக்கொண்டு வந்தான். அவனுடன் இன்னொரு சைக்கிளில், இன்னொரு பையன். இருவருமாக ஏதோ சிரித்துப் பேசியபடி வந்தார்கள். அந்த சுவாரஸ்யத்திலேயே என் வீட்டை தாண்டிச் சென்றார்கள். நான் கைதட்டி அழைத்தேன்.

குறிப்பிட்ட கடைப்பெயரைச் சொல்லி ‘‘அங்கிருந்துதானே பேப்பர் கொண்டுவருகிறாய்?‘‘ என்று கேட்டேன். அவன், ‘‘ஆமாம்‘‘ என்றான்.

‘‘அப்படியானால் ஏன் என் வீட்டிற்கு பேப்பர் போடவில்லை?" என்று கேட்டேன். உடனே, ஒரு தாளில் எழுதி வைத்திருந்த பட்டியலைப் பார்த்தான் பையன். பிறகு, என் வீட்டு இலக்கத்தைப் பார்த்தான். உடனே ‘‘சாரி சார். பேச்சுவாக்கிலே மறந்திட்டேன்,’‘ என்று கூறி எனக்குரிய செய்தித்தாளைக் கொடுத்தான். அடுத்த நாள், சைக்கிளில் போய்க்கொண்டே வீட்டிற்குள் பேப்பரை வீசி எறிய, அது தண்ணீர் தெளித்து கோலம்போட்ட ஈரத்தரையில் விழுந்து வீணாயிற்று. இன்னொரு சமயம் அவ்வாறு வீசி எறியப்பட்ட செய்தித்தாள் பிரிந்து தனித்தனி தாள்களாகப் பறந்து போயிற்று.

விவரம் தெரிந்தவர்களை விட்டுவிட்டு சின்னப் பையன்களை இப்படி பேப்பர் போட அனுப்புகிறாரே என்று கடைக்காரரிடம் என் கோபத்தைத் தெரிவித்தேன். அவரோ, ‘‘பையன்களுக்கு ஸ்கூல் லீவு சார். அதான், லீவு நாள்ல ஏதாவது சம்பாதிக்கலாமேன்னு வராங்க. விளையாட்டுப் பசங்க சார். நான் சொல்லி சரி பண்ணறேன்,‘’ என்று சமாதானம் சொன்னார்.

உண்மையில் அவர் இப்படி சிறுவர்களை அவர் இந்த செய்தித்தாள் விநியோகிக்கும் வேலையில் அமர்த்திக் கொள்வதற்குக் காரணம், இவர்களுக்கு மிகவும் சொற்ப தொகையை ஊதியமாகக் கொடுத்தால் போதும் என்பதால்தான். சுமார் இரண்டு மாத, கோடைக்கால விடுமுறையில், ஒரு நாளைக்கு இருபது ரூபாய் வீதம் பணம் கிடைப்பது என்பது ஏழாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவனுக்குப் பெரிய வருமானம்தான். அதிலும் அவனைப் போன்ற சிறுவர்கள் வறுமை சூழ்ந்த குடும்பத்தினராக இருந்தால் அது அத்தியாவசியத் தேவையும்தான். ‘‘நமக்கும் லாபம், பையனுக்கும் சந்தோஷம் சார்,’‘ என்று சிரித்துக் கொண்டே சமாதானம் சொன்னார் கடைக்காரர்.

இதையொட்டி இன்னொரு தகவலும் எனக்குக் கிடைத்தது. அதாவது விடுமுறை நாட்களில் வருமானம் ஈட்டும் சிறுவர்கள், பள்ளிக்கூடம் திறந்த பிறகு படிப்பில் ஆர்வம் காட்டாமல், அதே சம்பாத்யம் கிடைக்குமா என்று ஏங்க ஆரம்பித்து விடுகிறார்களாம். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பெற்றோர்களே பிள்ளைகளை இப்படி பணம் சம்பாதித்துக் கொண்டுவர அனுப்புகிறார்களாம்.

இதையும் படியுங்கள்:
Max Alexander: 7 வயதிலேயே பிரபல ஆடை வடிமைப்பாளரான சிறுவன்!
Newspaper Boy

சிறுவர்களைப் பணியில் அமர்த்தக்கூடாது என்று சட்டமே இருக்கிறது. பட்டாசு தொழிற்சாலை, கட்டிட கட்டுமான வேலை, கடைகள், உணவு விடுதிகளில் பணிபுரிவது போன்றதுதான் சிறுவர்களை செய்தித்தாள் போடச் செய்வதும்.

விடுமுறை நாட்களில் சிறுவர்கள் கூடுதல் அறிவுபெற, தம் திறமையை வளர்த்துக்கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றில் சிறுவர்களை ஈடுபடுத்தலாம். இதன்மூலம் நல்ல குடிமக்களை நாம் உருவாக்கலாமே என்று பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டேன்.

இதையும் படியுங்கள்:
உறங்கிய ஆசிரியரை ஓவியமாகத் தீட்டிய சிறுவன்!
Newspaper Boy
Read Entire Article