ARTICLE AD BOX
பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா 270 கிலோ எடையுள்ள கம்பி கழுத்தில் விழுந்ததில் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா, இளையோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளியில் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றவராவர்.
இந்த நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை(பிப். 18) பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவர் தலைக்குமேல் தூக்கிய 270 கிலோ எடையுள்ள கம்பியானது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் பலமாக விழுந்தது.
அதிக எடையை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது கழுத்து முறிந்த நிலையில், பயிற்சிக் கூடத்திலிருந்தோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வீராங்கனையின் கழுத்தில் எடை கம்பி விழும் விடியோ சமூக வலைதளஙக்ளில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நெஞ்சை கசக்கும் இந்த விடியோ பார்வையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிக எடையை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது கழுத்து முறிந்ததாகவும், இதன்காரணமாகவே அவர் உயிர் பிரிந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று(பிப். 19) காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவருடன் இருந்த பயிற்சியாளருக்கு லேசான காயம் உண்டானது.
இந்த மரணத்தில் எவ்வித சந்தேகமும் எழாத நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாரும் புகார் எதுவும் தரவில்லை. இதனைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டபின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.