ARTICLE AD BOX
சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். குறிப்பாக, குரல், டிவிஷன் வாக்கெடுப்பு விதிமுறைகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் விளக்கியதாக கூறப்படுகிறது.
அண்மை காலமாக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவதை, செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இந்த சூழலில் இன்றைய தினம் (மார்ச் 17) சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதனிடையே, 9 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த கட்சியின் மூத்த நிர்வாகி என்ற அடிப்படையில், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு பின்வரிசையில் செங்கோட்டையனுக்கு இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்கிற முறை, பல புதிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இரண்டு முறை குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று துணை சபாநாயகர் கூறினார். அதற்கு, முதலில் டிவிஷன் முறையை பின்பற்ற வேண்டும் என அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினர். ஆனால், பல முறை இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட அனுபவம் பெற்றிருந்ததால், முதலில் இரண்டு முறை குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும், அதன் பின்னர் தான் டிவிஷன் முறை பின்பற்றப்படும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தினார்.
இதனை மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் சரியாக கேட்கவில்லை. இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியிடம் வாக்கெடுப்பு முறை குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இதைக் கேட்ட எடப்பாடி பழனிசாமியும், உடனடியாக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை ஆசுவாசப்படுத்தினார். இதன் மூலம் செங்கோட்டையனின் ஆலோசனையை, எடப்பாடி பழனிசாமி உடனடியாக கேட்டுக் கொண்டது தெரிய வருகிறது.
மேலும், இன்றைய தினம் மற்ற அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் சற்று இணக்கமான விதத்தில் செங்கோட்டையன் இருந்ததாக தெரிகிறது. முன்னதாக அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்காமல் இருந்தது முதல், செங்கோட்டையன் மற்றும் இ.பி.எஸ் இடையே பனிப்போர் நிலவி வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது இருவரும் பேசிக் கொண்டது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.