ARTICLE AD BOX
வெயில் சுட்டெரிக்கும் காலகட்டத்தில் அதற்குத் தகுந்தாற்போல உடை அணிவது மிகவும் அவசியம். பலரும் பருத்தி ஆடைகள்தான் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்ற உடைகள் என்று கருதுகிறார்கள். ஏனென்றால் அவற்றின் லேசான தன்மை மற்றும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் திறன் போன்ற காரணங்களால் பருத்தி ஆடைகளை அதிகம் விரும்புகிறார்கள். பருத்தி ஆடைகளை போன்று வேறு வகையான சில ஆடைகளும் கோடை கலத்திற்கு அணிய ஏற்றவைதான்.
1. லினன்;
தற்போது பலராலும் விரும்பப்படும் ஆடை வகைகளில் லினனும் ஒன்று. இது ஆளி இழைகளில் இருந்து தயாரிக்கப்படும் கைத்தறி ஆகும். நீடித்து உழைக்கும் தன்மையும் பருத்தி விட வலிமையானதும் ஆகும். இது அதிக வெப்பம் கடத்தும் திறன் கொண்டது. அதனால் வெப்பமான கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. ஈரப்பதத்தை நன்றாக உறிஞ்சி விரைவாக காய்ந்தும் விடும். இதை அணிந்திருக்கும் போது குளிர்ச்சியாகவும் வசதியாகவும் வைத்திருக்கும். அதிகமான வெப்பநிலையிலும் கூட குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் திறன் பெற்றது.
வியர்த்து சருமத்துடன் அதிகமாக ஒட்டிக்கொள்ளாது. சரியாக பராமரித்தால் நீண்ட காலம் நீடித்து உழைக்கும். இந்த வகை துணிகளை தயாரிக்க குறைந்த நீர் மற்றும் ஆற்றல் தேவைப்படுகிறது என்பது இதன் தனித்தன்மையாகும். ஒவ்வாமையை குறைக்கும் தன்மை கொண்டதாகவும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கிறது.
2. ஷிஃபான்;
வெப்பமான தட்பவெப்பத்திற்கு ஏற்றார்போல ஸ்டைலான மற்றும் வசதியான ஆடையாகும். அணிந்திருக்கும்போது மிகவும் இலகுவாக இருக்கும். துணி தோலில் ஒட்டிக்கொள்வதை தடுக்கிறது. இது விரைவில் காயக்கூடியது. துவைத்து பராமரிக்க எளிதாக இருக்கும். இளம் பெண்களுக்கு ஏற்ற மேக்சி, மிடி, சுடிதார் செட்டுகள் மற்றும் நாகரீக உடைகள் ஷிஃபான் வகைகளில் கிடைக்கின்றன
3. ரேயான்;
மனிதர்களால் உருவாக்கப்பட்ட நாரான ரேயான் இலகு ரகமாகவும் வியர்வையை உறிஞ்சக்கூடிய வகையிலும் இருக்கிறது. சாதாரண சட்டைகள் முதல் நேர்த்தியான கவுன்கள் வரை பல்வேறு வகையான ஆடைகளை தயாரிக்க ரேயான் உதவுகிறது. வியர்வையில் உடல் நனைந்து துணி உடலுடன் ஒட்டிக்கொள்வதை தடுக்கிறது. லேசான காற்றோட்டமான உணர்வை இந்த ரேயான் உடைகள் வழங்குகின்றன
4. பட்டு;
பட்டு சேலைகள் மற்றும் பட்டு வேட்டிகள் போன்றவை ஆடம்பரமான உடைகளாக இருந்தாலும் இயற்கையான வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. ஈரப்பதத்தை உறிஞ்சி சருமத்தை வியர்வை இன்றி வைக்கிறது. இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உடலுக்கு ஏற்றவையாக உள்ளன. அதே சமயத்தில் கோடைக் காலத்தில் நடைபெறும் விழாக்களுக்கு கனமான பட்டு சேலைகளை உடுத்தாமல் இலகு ரகத்தில் உள்ள பட்டு சேலை உடுத்துவது நல்லது.
5. காதி;
கையால் நூற்கப்படும் பருத்தித் துணியான காதி அதன் நிலைத்தன்மைக்கும் சுவாசிக்கும் தன்மைக்கும் பெயர் பெற்றது. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த காதி இந்தியாவில் பிரபலமான துணி வகையாகும். கோடையில் குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் சூடாகவும் வைத்திருக்கும் தனித்தன்மை காதித் துணிகளுக்கு உண்டு. இந்த வகை துணிகளை ஆண்டும் முழுவதும் பயன்படுத்த ஏற்றவை என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
6. மல்மல்;
சிறந்த பருத்தி வகையைச் சேர்ந்த மல்மல் மிகவும் மென்மையானது மற்றும் காற்றோட்டமாக இருக்கும். தினசரி கோடைகாலத்தில் இந்த வகை உடைகளை அணிந்து கொள்ளலாம். இதை அணிந்திருக்கும்போது சருமத்திற்கு மென்மையான உணர்வைத் தருகிறது. சாதாரணமாக நிகழ்வுகள், பயணிக்கும்போதும் இதை அணிந்து கொள்ளலாம். இது வசதியாகவும் ஈரப்பதத்தை உறிஞ்சும் வகையிலும் அமைந்திருக்கிறது ஈரப்பதமான வானிலைக்கும் இந்த துணி ஏற்றது.