பரீட்சைக்கு நேரமாச்சு! பிள்ளைகளை உற்சாகப் படுத்துங்கள் பெற்றோர்களே!

1 day ago
ARTICLE AD BOX

பொதுத்தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. பிள்ளைகள் பயத்துடனும், படபடப்புடனும், பொறுப்புடனும் மும்மரமாக படித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அவர்களை பெற்றோர்களும் உறவினர்களும் நண்பர்களும் உற்சாகப்படுத்த வேண்டும். இப்படிச் செய்வது நல்ல பலனைத் தரும்.

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒவ்வொரு மாணவ மாணவியரின் வாழ்வில் முக்கியமான ஒரு கட்டமாகும். குறிப்பாக பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் பெறும் அதிக மதிப்பெண்கள் அவர்கள் சிறந்த கல்லூரிக்குள் சுலபமாக நுழைய வழிவகுக்கும். ஆனால் மதிப்பெண்களே ஒருவரின் வாழ்வின் வெற்றியைத் தீர்மானித்துவிடாது என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.

பல பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அதிக மதிப்பெண்களை வாங்க வேண்டும். முதல் மாணவனாக தேர்வு பெறவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பதைக் காணநேருகிறது. பெற்றோர்களைப் பொறுத்தவரை அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால் இப்படி அடிக்கடி பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டே இருப்பது அவர்களின் மனதில் ஒருவித நெருக்கடியையும் பயத்தையும் ஏற்படுத்தும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டும்.

ஒருவேளை மதிப்பெண்கள் குறைந்து போனால் என்ன செய்வது? பெற்றோரை எப்படி எதிர்கொள்ளுவது? என்ற எண்ணம் அவர்களின் மனதில் இயல்பாகவே தோன்றிவிடுகிறது. இதனால் அவர்களின் மனஉறுதியும் உற்சாகமும் குறைந்து ஒருவித படபடப்பு உண்டாகிறது. இது அவர்கள் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளும் மனஉறுதியைக் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படியுங்கள்:
ஓய்வு நேரங்களை மதியுங்கள்... வெற்றி நிச்சயம்!
encourage your children

பெற்றோர்கள் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டிய நேரமிது. “உன்னால் முடியும். தைரியமாக தேர்வுகளை எதிர்கொள். பயப்படாதே. எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் பரவாயில்லை. பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி உங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள். இப்படிக் கூறுவதால் பெற்றோர்களின் மீது உள்ள ஒருவித பயஉணர்வு அகன்று உற்சாக உணர்வு அவர்களைத் தொற்றிக்கொள்ளும். இன்னும் ஆர்வமாக படிக்கத் தொடங்குவார்கள்.

பெரும்பாலான மாணவ மாணவியர் தேர்வு நெருங்கும் சமயத்தில் இரவு நேரத்தில் கண்விழித்துப் படிப்பார்கள். இத்தகைய வேளைகளில் அவர்களிடம் சாப்பிட ஏதாவது தேவையா என்று அன்பாகக் கேளுங்கள். பிள்ளைகள் ஏதாவது கேட்டால் அவர்களுக்கு அதைக்கொடுத்து உதவுங்கள்.

இரவில் பதினோரு மணிக்கு மேல் கண்விழித்துப் படிக்க வேண்டாம் என்று அன்பாக அறிவுறுத்துங்கள். இரவு வேளைகளில் அதிக நேரம் கண்விழித்துப் படிப்பதால் ஒருவித சோர்வு மனப்பான்மை ஏற்படும். இதற்கு பதிலாக அதிகாலை எழுந்து படியுங்கள். நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுங்கள்.

தேர்வு நெருங்கும் சமயத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் அவர்கள் மீது கோபத்தைக் காட்டாதீர்கள். எப்போதும் புன்னகை ததும்பும் முகத்துடன் உங்கள் பிள்ளைகளை அணுகுங்கள். இந்த அணுகுமுறை அவர்களின் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி மனதில் ஒருவித அமைதியை உண்டாக்கும்.

ஒவ்வொரு தேர்வு தினத்தன்றும் உங்களில் யாராவது ஒருவர் உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு ஆல் தி பெஸ்ட் என்று கூறி வாழ்த்தி தேர்வு மையத்திற்கு அனுப்பி விட்டு வாருங்கள். முடிந்தால் இருவரும் செல்லுங்கள். உங்கள் வாழ்த்து அவர்களை உற்சாகப்படுத்தும்.

நல்ல மதிப்பெண் எடுத்தால் உன் எதிர்காலத்திற்கு நல்லது. முயற்சி செய்துபடி. நல்லபடியாக தேர்வுகளை எழுது. ஒருவேளை எதிர்பாராத விதமாக மதிப்பெண்கள் குறைந்தாலும் கவலைப்படாதே செல்லமே. பார்த்துக் கொள்ளலாம். வாழ்வில் முன்னேற ஆயிரம் வழிகள் இருக்கிறது என்று அன்பாக எடுத்துரையுங்கள்.

நம் குழந்தைகளை உற்சாகப்படுத்துவது நமது கடமைகளில் முக்கியமான ஒன்று என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டிய தருணம் இது. உங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள். தேர்வில் மட்டுமல்ல. வாழ்விலும் அமோகமான வெற்றியை அவர்கள் குவிப்பார்கள். வாழ்த்துகள்.

Read Entire Article