ARTICLE AD BOX
ராஜஸ்தானில், பளுதூக்கும் வீராங்கனை ஒருவருக்கு, பயிற்சியின்போது அதிக எடைகொண்ட வெயிட் லிஃப்ட் கம்பி கழுத்தில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் 17 வயதான யாஷ்திகா. இவர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர், ஜெய்ப்பூரில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் தனது சக வீரர் வீராங்கனைகளுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, 270 கிலோ எடைகொண்ட ராடை கழுத்தில் வைத்தபோது, எதிர்ப்பாராத விதமாக கழுத்திலேயே ராட் விழுந்தது. இதனால், அவரது கழுத்தெலும்பு உடைந்தது. அவரை காப்பாற்ற முயன்ற பயிற்சியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக யாஷ்டிகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த வீராங்கனையின் உடல்கூராய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த யாஷ்டிகாவின் குடும்பத்தினர் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜூனியர் பிரிவுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற யாஷ்திகா ஆச்சாரியாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது, சக வீராங்கனைகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.