ARTICLE AD BOX
தங்கள் நாடு உலகளவில் செயல்படுத்தி வரும் Belt and Road திட்டத்தை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக சீனா வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், ”அமெரிக்கா அளித்த நெருக்கடி காரணமாக தங்கள் திட்டத்திலிருந்து பனாமா வெளியேறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சீனாவின் ஆதிக்கம், அதிக கட்டணம் வசூல் போன்ற காரணங்களால், அதிபராக ட்ரம்ப் பதவியேற்றவுடனேயே பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று அறிவித்தார். பனாமா கால்வாய் சீனாவுக்கானது அல்ல என்றும் தவறானவர்களின் கைக்குச் சென்றுவிட்டது என்றும் அவர் விமர்சித்திருந்தார். இதன் காரணமாகவே அதை மீட்போம் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முனிலோவும் பதிலடி கொடுத்திருந்தார். எனினும், பனாமா கால்வாயை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டிய சூழலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பனாமா சென்றார். அதிபர் ட்ரம்பின் நிலைப்பாட்டை பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முலினோவிடம் ரூபியோ எடுத்துரைத்தார். இதையடுத்து, சீனாவுடன் செய்துகொண்ட பெருவழிப்பாதை திட்ட ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கப்போவதில்லை என்று பனாமா அதிபர் முலினோ அறிவித்தார்.
இந்தச் சூழலில்தான் சீனாவின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தனது ஆதிக்கத்தை விரிவாக்க முனைந்துள்ளது, சீனா. அந்நாடு, Belt and Road INITIATIVE என்ற பெயரில் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில் இணையும் நாடுகளுக்கு சாலைகள், தண்டவாளங்கள், மின்சார உற்பத்தி போன்ற கட்டமைப்பு திட்டங்களுக்கு சீனா உதவி வருகிறது குறிப்பிடத்தக்கது.