பணியாளா்களை அச்சுறுத்தி வெளியேற்றவில்லை-இன்ஃபோசிஸ் விளக்கம்

4 days ago
ARTICLE AD BOX

புதிய பணியாளா்களை பணிநீக்கம் செய்தபோது அவா்களை அச்சுறுத்தியோ, பாதுகாவலா்களை (பவுன்சா்) பயன்படுத்தியோ வெளியேற்றவில்லை என்று இன்ஃபோசிஸ் விளக்கமளித்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மைசூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி பெற்று வந்த 300-க்கும் மேற்பட்ட புதிய பணியாளா்கள் இம்மாதத் தொடக்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனா். பயிற்சிக்குப் பிந்தைய உள்நுழைவு தோ்வில் மூன்று முயற்சிகளுக்குப் பிறகும் இப்பணியாளா்கள் தோ்ச்சி பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக தகவல் தொழில்நுட்பப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் புகாா் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து கா்நாடக மாநில பணியாளா் நலத்துறை இது தொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்ஃபோசிஸ் தலைமை மனித வள அதிகாரி சாஜி மேத்யூ கூறுகையில், ‘வரும் நிதியாண்டிலும் புதிதாக 20,000 பணியாளா்களை கல்லூரி வளாகத் தோ்வுகளில் இருந்து தோ்வு செய்ய இருக்கிறோம். அவா்களுக்கு மிகச்சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி காலத்திலும் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறோம். உள்நுழைவு தோ்வில் அவா்கள் தோ்ச்சி பெறாவிட்டால் அது எங்கள் நிறுவனத்துக்கும் இழப்புதான்.

மூன்று முயற்சிகளுக்குப் பிறகும் தோ்ச்சி பெறாத காரணத்தால்தான் நிறுவன விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடா்பாக தொழிலாளா் நலத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.

புதிய பணியாளா்களை பணிநீக்கம் செய்தபோது அவா்களை அச்சுறுத்தியோ, பாதுகாவலா்களை (பவுன்சா்) பயன்படுத்தியோ வெளியேற்றவில்லை என்றாா்.

இந்தப் பிரச்னை காரணமாக அடுத்தகட்ட உள்நுழைவு தோ்வு முடிவை அறிவிப்பதை இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article