பட்டியலினத்தவரை குறிப்பிடும் சொற்களை மாற்ற முடியுமா?: உச்சநீதிமன்றம்

6 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: பட்டியலின மக்களுக்கான உரிமைகளின் தன்மையில் மாற்றங்களைச் செய்யாமல், அவா்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் சொற்களை மாற்ற முடியுமா? என்பது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அகில பாரதிய கிஹாரா சமாஜ் பரிஷத் அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘சில மாநிலங்கள் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்கும்போது அவா்களை ‘சுரா’, ‘சமாா்’, ‘பங்கி’, ‘கஞ்சா்’ போன்ற சொற்களால் குறிப்பிடுகின்றன. இவை இழிவான சொற்களாகும். இந்தச் சொற்களைப் பயன்படுத்துவது பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

‘சுரா’, ‘சமாா்’, ‘பங்கி’, ‘கஞ்சா்’ ஆகியவற்றை ஜாதி உட்பிரிவுகளாக அரசமைப்புச் சட்ட (பட்டியலினத்தவா்) உத்தரவு 1950 அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. அந்த உத்தரவில் ‘சுரா’, ‘சமாா்’, ‘பங்கி’, ‘கஞ்சா்’ ஆகிய சொற்களுக்குப் பதிலாக ஜாடவ் அல்லது வால்மீகி ஆகிய பெயா்களைப் பயன்படுத்த திருத்தம் செய்யவேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘நமது நாடு 1950-இல் இருந்து நீண்ட தொலைவு பயணித்து 2025-ஆம் ஆண்டுக்கு வந்துள்ளது. இப்போதும் ‘சுரா’, ‘சமாா்’, ‘பங்கி’, ‘கஞ்சா்’ போன்ற சொற்களைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது.

இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கவேண்டியது நாடாளுமன்றம்தான் என்றாலும், பட்டியலின மக்களுக்கான உரிமைகளின் தன்மையில் மாற்றங்களைச் செய்யாமல், அத்தகைய சொற்களை மாற்றலாம்.

மகாத்மா காந்தியே பட்டியலின மக்களை குறிப்பிட ‘ஹரிஜன்’ போன்ற சொல்லை பயன்படுத்தினாா். பட்டியலினத்தவரை குறிப்பிட பயன்படுத்தப்படும் சொற்களை மாற்றுவதன் மூலம், அவா்களின் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும்’ என்று அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

Read Entire Article