ARTICLE AD BOX
நம் பஞ்சாப் மாநில மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ்ஸான 'தஹி பல்லா' (Dahi Bhalla) எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தஹி பல்லா புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் தரக்கூடிய ஓர் அருமையான ஸ்னாக்ஸ். உளுத்தம் பருப்பு உபயோகித்து தயாரிக்கப்படும் பல்லாக்கள் கெட்டித் தயிர் மற்றும் இம்லி சட்னி, கார சட்னியுடன் பரிமாறப்படுகிறது.
தஹி பல்லா ரெசிபி
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு 1 கப்
இஞ்சி பேஸ்ட் ½ டீஸ்பூன்
சீரகம் ¼ டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
கெட்டித் தயிர் 2 கப்
தண்ணீர் 4 கப்
க்ரீன் சட்னி 1 டேபிள் ஸ்பூன்
புளி சட்னி 1 டேபிள் ஸ்பூன்
மாதுளை முத்துக்கள் ¼ கப்
பச்சை கொத்தமல்லி இலைகள் 1 பிடி
செய்முறை:
உளுத்தம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின் அதனுடன் இஞ்சி பேஸ்ட், சீரகம், உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து மிக்ஸியில் மசிய அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அரைத்தெடுத்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பொரித்த பல்லாக்களை தண்ணீரில் போடவும்.
பின் தண்ணீரில் ஊறிய பல்லாக்களை பிழிந்து, வாயகன்ற பாத்திரத்தில் அடுக்கவும். அதன் மீது தயிரை ஊற்றவும். மேற்பரப்பில் க்ரீன் சட்னி மற்றும் புளி சட்னிகளை அழகு மிளிர ஸ்பூனால் எடுத்து ஊற்றவும். கொத்தமல்லி இலைகள் மற்றும் மாதுளை முத்துக்களை பல்லாக்கள் மீது தூவி அலங்கரித்துப் பரிமாறவும். செம டேஸ்டியான கலர் ஃபுல் தயிர் வடைகளை ரசித்து ருசிக்கவும்.
புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இலைகளுடன், இரண்டு பல் பூண்டு, உப்பு, சிறிது ஜீரகம், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்க க்ரீன் சட்னி ரெடி.
இம்லி சட்னி:
கொட்டை நீக்கிய புளி, பேரீச்சம் பழம், கிஸ்மிஸ் ஆகியவற்றை கொதிக்கும் நீரில் போட்டு மிருதுவாகும்வரை வேகவைத்து எடுக்கவும். அதனுடன் வெல்லம், சீரகப் பவுடர், ரெட் சில்லி பவுடர், இஞ்சி பேஸ்ட், கரம் மசாலா பவுடர், பிளாக் சால்ட் சேர்த்து மசிய அரைக்கவும்.
சுவையான புளி சட்னி தயார். புளி சட்னியை கண்ணாடி ஜாடியில் போட்டு இறுக மூடி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு நான்கு வாரம் வரை தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம்.