ARTICLE AD BOX
நியூக்ளியர் ஃபேமிலி எனப்படும் தனிக் குடும்பங்கள் பெருமளவில் உள்ள இந்தக் காலக்கட்டத்தில், புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தைகளை சரிவர கையாள இளம் பெற்றோருக்கு தெரிவதில்லை. முதல் முறையாக பெற்றோர்கள் ஆகும்போது அவர்களை அறியாமலேயே சில தவறுகளை செய்கிறார்கள்.
குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் பொறுப்பான மற்றும் முக்கியமான கலை. அதிலும் பச்சிளம் குழந்தைகளை நன்றாக பராமரிப்பது மிகவும் அவசியம். தாயுடன் சேர்ந்து தந்தையும் குழந்தையை பராமரிப்பதில் ஈடுபட வேண்டும். குழந்தைக்கு டயப்பர் மாற்றுவது, இரவில் அழுதால் கவனிப்பது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும்.
பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்கக் கூடாது. பட்டன், கொக்கி போன்றவை இல்லாமல் மிகவும் சௌகரியமான ஆடையாக இருக்க வேண்டும். அது உடலை உறுத்தவோ அழுத்தவோ கூடாது.
பிறந்த குழந்தையை பார்க்க உறவினர்கள் நண்பர்கள் வருவார்கள். அவர் எல்லோரிடத்திலும் குழந்தையை கொடுத்து கொஞ்சுவது கூடாது. பல கைகள் மாறும் போது அவர்களின் உடல் சூடு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது. மேலும் பல தொற்று நோய்கள் உருவாகலாம். எனவே தள்ளி நின்று குழந்தையை பார்க்கச் சொல்லலாம். இதில் கண்டிப்பு காட்டுவதில் தவறில்லை.
அன்னையோ தந்தையோ, குழந்தையை தொட்டு எடுக்கும் முன்னர், டயப்பர் மாற்றிய பின்னர் கைகளை நன்றாக கழுவிக் விட்டு எடுக்க வேண்டும்
புதிதாய் பிறந்த குழந்தைகள் தூங்கிக் கொண்டே இருக்கும். 18 இருந்து 20 மணி நேரம் வரை உறங்கும். எனவே அவைகளுக்கு கடுமையான தூக்க அட்டவணைகள் தேவையில்லை. அவை உறங்கிக் கொண்டிருக்கும்போது எழுப்பி பால் ஊட்டத் தேவையில்லை. தானாகவே கண்விழித்ததும் பால் ஊட்டலாம். ஆனால், அதிக நேரம் குழந்தையை தூங்க விடுவதும் தவறு. குழந்தை பிறந்த முதல் சில வாரங்களில் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
பால் குடித்து முடித்ததும் குழந்தையை அப்படியே கொண்டு போய் தொட்டிலில் போடுவது மிகவும் தவறு. பால் குடித்து முடித்த குழந்தையை தோளில் போட்டு முதுகை நீவி விட வேண்டும். அது ஏப்பம் விடும் வரை காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளை நிறத்தில் தயிர் போன்று கக்கும் அல்லது வயிற்று வலியால் குழந்தை அழும்.
பால் குடித்து முடித்ததும் அப்படியே விட்டு விடக்கூடாது. குழந்தையின் ஈறுகளையும் உதடுகளையும் மென்மையான ஈரமான துணியால் துடைத்து விட வேண்டும்.
பெற்றோர்கள் உணர்ச்சிவசப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுதல் சண்டையிடுதல் போன்றவற்றை குழந்தையின் முன்பு செய்யக்கூடாது. அது பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் அதன் மூளை வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும்.
குழந்தையைப் போல பேசுதல் கூடாது. அது குழந்தையை குழப்பத்தில் ஆழ்த்தும். தெளிவான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். சின்ன சின்ன வாக்கியங்களாக இருக்கும்போது குழந்தை நன்றாக புரிந்து கொள்ளும்.
குழந்தைக்கு உடல் சூடு அதிகரித்தால் கவனிக்காமல் விட்டு விடக்கூடாது. அதற்கு ஜன்னி ஏற்படக்கூடும். எனவே உடல் சூட்டில் மாறுபாடுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.
முதல் ஒரு வருடம் வரை அவசியம் தாய்ப்பால் தர வேண்டும். பசுவின் பால், பாக்கெட் பால் தேவையில்லை. அதேபோல செர்லாக் போன்ற செயற்கை ஊட்டச்சத்து உணவுகளும் குழந்தைக்கு தேவை இல்லை.
குழந்தையை தூக்கும் போதும் குளிக்க வைக்கும் போதும் மிகுந்த கவனம் தேவை. ஏனென்றால் அதனுடைய தலை மூன்று மாதம் கழித்து தான் நிற்கும். எனவே மிகுந்த ஜாக்கிரத்துடன் கையாள வேண்டும். குளிக்க வைக்கும் போது கால்களில் போட்டு குளிக்க வைத்தால் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை காலில் இருந்து நழுவிக் கீழே விழ வாய்ப்புகள் இருக்கின்றன.