நீலகிரி: வனப்பகுதிகளில் உள்ள தரைத்தள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்

3 days ago
ARTICLE AD BOX

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வனம் பசுமை இழந்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல வனச்சரகங்களான மசினகுடி, சீகூர், சிங்காரா வனப்பகுதியில் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கோடை வெயிலின் தாக்கத்தால் தாகத்தை தணிக்க விவசாய நிலம் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகளை தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காட்டு யானைகள், மான்கள், கரடிகள், புலிகள், காட்டெருமைகள், சிறுத்தை புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளின் தாகத்தை தணிக்க வனப்பகுதியில் ஏற்கனவே வனத்துறை சார்பில் அமைத்துள்ள தரைத்தள தொட்டிகளில் தண்ணீர் ஊற்றி நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மசினகுடி வனச்சரகர் பாலாஜி, சீகூர் வனச்சரகர் தயானந்தன், சிங்கார வனச்சரகர் தனபாலன் உள்ளிட்ட வனத்துறையினர் டேங்கர் லாரிகள் மூலம் தரைத்தள தொட்டிகளில் தண்ணீரை ஊற்றி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கோடை காலம் முழுவதும் வனவிலங்குகளின் தாகத்தை போக்கும் வகையில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்கும் வகையில் தினமும் லாரிகளில் வனத்துக்குள் கொண்டு சென்று தண்ணீர் ஊற்றப்படும். கோடை மழை அல்லது பருவமழை தொடங்கி குட்டைகளில் தண்ணீர் நிரம்பிய பிறகு இப்பணி முடிவுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Read Entire Article