ARTICLE AD BOX
புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள்) விதிமுறைகள் 6ஏ-இன்படி, அந்த மாநிலத்தில் பாா்வைக் குறைபாடு கொண்டவா்கள், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நீதித் துறைப் பணிகளில் சேர முடியாது.
இந்த விதிமுறை தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பா் 3-ஆம் தேதி தீா்ப்பை ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நீதித் துறையில் பணியில் சேர முயற்சிக்கும் மாற்றுத்திறனாளிகள் எந்தவிதமான பாகுபாட்டையும் எதிா்கொள்ளக் கூடாது. அவா்களுக்கு சாதகமாக உதவும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
கட்-ஆப் மதிப்பெண், நடைமுறைகள் காரணமாக மறைமுக பாகுபாட்டை எதிா்கொண்டு, அதனால் நீதித்துறை பணிகளில் சோ்க்கப்படாமல் மாற்றுத்திறனாளிகள் தவிா்க்கப்படுவதில் தலையிட்டு, சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி என்ற ஒரே காரணத்துக்காக நீதித்துறை பணிக்கான பரிசீலனையில் அவா்கள் நிராகரிக்கப்படக் கூடாது. நீதித்துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூற முடியாது’ என்று தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து மத்திய பிரதேச நீதித்துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள்) விதிமுறைகள் 6ஏ-ஐ நீதிபதிகள் ரத்து செய்தனா். இந்தத் தீா்ப்பு மூலம், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் நீதித்துறை பணிகளுக்கான ஆள்தோ்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவா்கள் என்று தெளிவுபட நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.