'நீங்கள் நல்ல அணியாக இருந்தால்..' இந்தியாவுக்கு சவால் விடுத்த பாகிஸ்தான்! என்ன விஷயம்?

20 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடரை நடத்தும் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் நடந்த தோல்விக்கு இந்தியா பழிதீர்த்துக் கொண்டது.

முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. ஐசிசி தொடர்களில் மற்றொருமுறை மோசமான தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை அந்த நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையே கூண்டோடு கலைக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர். பாகிஸ்தான் அணி வீரர்கள் இடையே ஒற்றுமை இல்லாததே தோல்விக்கு காரணம் என தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்திய ரசிகர்களும் பாகிஸ்தானை வறுத்தெடுத்தனர். ''இந்தியாவை ஒருபோதும் பாகிஸ்தான் வீழ்த்தவே முடியாது. ஐசிசி போட்டிகளில் இந்தியா தான் கெத்து'' என ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் ரசிகர்கள், 'எப்போதாவது ஒரு போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி விட்டு இந்தியா தான் கெத்து என்று சொல்வதில் நியாயமில்லை' என்று தெரிவித்தனர்.  இந்நிலையில், முடிந்தால் பாகிஸ்தான் கூட 10 டெஸ்ட், ஓடிஐ விளையாடி ஜெயித்து பாருங்கள் என்று இந்திய் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாக்லைன் முஷ்டாக் சவால் விடுத்துள்ளார். 

24 நியூஸ் HD சேனலில் நடந்த ஒரு விவாத நிகழ்ச்சியில் பேசிய சாக்லைன் முஷ்டாக், ''நாம் அரசியல் விஷயங்களை ஒதுக்கி வைத்தால், அவர்களின் (இந்தியா) வீரர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். நீங்கள் (இந்தியா) உண்மையிலேயே ஒரு நல்ல அணியாக இருந்தால், பாகிஸ்தானுக்கு எதிராக 10 டெஸ்ட், 10 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாட வேண்டும். இந்த போட்டிகளின் முடிவில் யார் சிறந்த அணி? என்பது தெரிந்து விடும். இதன்மூலம் சிறந்த அணி இந்தியாவா? பாகிஸ்தானா? என்ற விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்'' என்றார்.

தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்து பேசிய சாக்லைன் முஷ்டாக், ''பாகிஸ்தான் அணி சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. அணி அதன் உள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடிந்தால், உலகளாவிய கிரிக்கெட் அரங்கில் அதன் பலத்தை நிரூபிக்கும் திறன் அதற்கு உள்ளது'' என்று தெரிவித்தார். சாக்லைன் முஷ்டாக் இந்திய அணிக்கு சவால் விடுத்த வீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சாக்லைன் முஷ்டாக்குக்கு பதிலடி கொடுக்கும் இந்திய ரசிகர்கள், ''10 அல்ல 100 டெஸ்ட், ஓடிஐ, டி20 போட்டிகளில் விளையாடினாலும் இந்திய அணியை பாகிஸ்தானால் வீழ்த்த முடியாது. முதலில் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒற்றுமையை கொண்டு வாருங்கள். அடுத்து இந்திய அணியை ஜெயிப்பது குறித்து யோசிக்கலாம்'' என்று கூறி வருகின்றனர். 

Read Entire Article