இந்தியாவில் எத்தனை பள்ளத்தாக்குகள் இருந்தாலும் சில குறிப்பிட்ட இடங்களில் உள்ள சில பள்ளத்தாக்குகளை நீங்கள் அவசியம் பார்த்தே தீர வேண்டும். அத்தனை அழகானவை அவை. அப்படி இந்தியாவில் உள்ள டாப் 10 மிக அழகான பள்ளத்தாக்குகள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.

அரக்கு
இந்தியாவில் உள்ள மிகச் சிறப்பான அழகான பள்ளத்தாக்கு, இந்த அரக்கு பள்ளத்தாக்கு. இயற்கையின் அற்புதத்தை இந்த இடத்திற்குப் போய்ப் பார்த்து நுகர முடியும். காபித் தோட்டங்கள், வனப்பகுதிகள், நீரோடைகள் என சொர்க்கம் போல காட்சி தருகிறது அரக்கு பள்ளத்தாக்கு. விசாகப்பட்டினம் வரை விமானத்தில் சென்ற பின்னர் அரக்கு பள்ளத்தாக்குக்குப் போகலாம்.
சுகோவ் பள்ளத்தாக்கு
மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களுக்கு இடையில் உள்ளது இந்த பள்ளத்தாக்கு. வட கிழக்கு இந்தியாவின் பொக்கிஷம் போன்றது இது. கோடை காலத்தில் இது பசுமை போர்த்திய பிரதேசமாக காட்சி தரும். எங்கு பார்த்தாலும் மூங்கில் மரங்கள் தான். பார்க்கவே படு ஜோராக இருக்கும். குளிர்காலத்தில் இங்கு பனி போர்த்திக் காணப்படும். அருமையான ஆறுகளையும் இங்கு பார்த்து ரசிக்கலாம். திம்மாபூர் விமான நிலையம் சென்று இந்த இடத்தை அடையலாம்.

சன்ஸ்கார் பள்ளத்தாக்கு
லடாக்கில் உள்ளது இந்த பள்ளத்தாக்கு. டிரெக்கர்களின் சொர்க்க பூமி இது. பழமையான புத்த மடாலயங்கள் இங்கு உள்ளன. டிரெக்கிங்தான் இங்கு மிகப் பிரபலம். உயரம் செல்லச் செல்ல உற்சாகமும் ஏறிக் கொண்டே போகும்.
கங்கரா பள்ளத்தாக்கு
இமாச்சல் பிரதேசத்தில் உள்ளது இந்த பள்ளத்தாக்கு. மஸ்ரூர் பாறை கோவில் இந்தப் பகுதியில் மிகப் பிரபலமானது. உயரமான மலைச் சிகரத்தின் மீது இது அமைந்துள்ளது. பனி போர்த்திய சிகரங்களையும் நாம் பார்த்து ரசிக்கலாம். பைன் மரக் காடு இன்னொரு அழகு. அழகான நீர் வீழ்ச்சிகளைக் காண கண் இரண்டு போதாது. சூப்பரான டிரெக்கிங்கையும் இங்கு மேற்கொள்ளலாம்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு
ஓங்கி வளர்ந்து உயர்ந்து காணப்படும் பனி போர்த்திய மலைகளுக்கு மத்தியில் அழகான குழந்தை போல காட்சி தருகிறது காஷ்மீர் பள்ளத்தாக்கு. பூமியின் சொர்க்கம் என்று இதைச் சொல்வது சும்மா அல்ல, உண்மையிலேயே சொர்க்கம் இப்படித்தான் இருக்கும். அட்டகாசமான ஆறுகள், பூந்தோட்டங்கள், புல்வெளிகள், பனி சிகரங்கள் என கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பேரழகுடன் காட்சி தருகிறது காஷ்மீர் பள்ளத்தாக்கு. மறக்காமல் தால் ஏரியில் ஒரு போட் ரைடு போய் விட்டு வாருங்கள். மொத்த சந்தோஷத்தையும் உணர்வீர்கள்.
நுப்ரா பள்ளத்தாக்கு
லே அருகே உள்ளது இந்த நுப்ரா பள்ளத்தாக்கு. லடாக் போனால் மறக்காமல் போக வேண்டிய இடம் இது. பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆறுகள், மலைகள், புல்வெளிகள், தோட்டங்கள் என்று இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. டிரெக்கிங்கும் இங்கு பிரபலமாக உள்ளது. பாக்ட்ரியன் ஒட்டகங்களும் இந்தப் பகுதியில் பிரபலமானவை.

ஸ்பிதி பள்ளத்தாக்கு
இமாச்சல் பிரதேசத்தில் இது உள்ளது. புகைப்படக் கலைஞர்களின் சொர்க்கம் என்று இதை சொல்வார்கள். அப்படி ஒரு போட்டோஜெனிக் வாட்டம் கொண்ட பிரதேசம். எதை போட்டோ எடுத்தாலும் அப்படி அழகு கொள்ளை கொள்ளும். பசுமையான புல்வெளிகள், ஆறுகள், பனி போர்த்திய மலைப் பகுதிகள் என்று மொத்த ஏரியாவும் கிளாஸாக இருக்கும். குன்சும் பாஸ், தங்கர் ஏரி என பல அருமையான பகுதிகள் இங்கு உண்டு.
சோலாங் பள்ளத்தாக்கு
மணாலி அருகே உள்ளது இந்த சோலாங் பள்ளத்தாக்கு. அட்வென்ச்சர் விரும்பிகளுக்கு ஏற்ற இடம். சோலாங் என்ற கிராமத்தை வைத்து இந்தப் பள்ளத்தாக்கிற்கு இப்படி பெயர் சூட்டப்பட்டது. பாரா கிளைடிங், ஸ்னோ போர்டிங், டிரெக்கிங், ஸ்கீயிங் ஆகியவை இங்கு பிரபலமானவை.
தீர்த்தன் பள்ளத்தாக்கு
இமாச்சல் பிரதேசத்தில் தான் இதுவும் உள்ளது. மிகவும் அமைதியானது. மணாலி அருகே உள்ளது. மலைகள், காடுகள், ஆறுகள் என இயற்கை மட்டுமே இங்கு கொடி கட்டிப் பறக்கிறது. கிரேட் இமயமலை தேசியப் பூங்கா இங்கு உள்ளது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பகுதி இது.
யும்தாங் பள்ளத்தாக்கு
சிக்கிமில் உள்ளது இந்த பள்ளத்தாக்கு. பூக்களின் பள்ளத்தாக்கு என்று இதைச் சொல்வார்கள். 12,500 அடி உயர பள்ளத்தாக்கு இது. அருமையான புல்வெளிகள், ஆறுகள் ஆகியவை இந்தப் பகுதியை அலங்கரிக்கின்றன. இங்குதான் ஷிங்பா ரோடோடென்டிரான் சரணாலயம் உள்ளது.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet