ARTICLE AD BOX
நிலவின் மேற்பரப்பில் ஒரு கன சென்டிமீட்டருக்கு 23,000 எலக்ட்ரான்கள் என்கிற அடிப்படையில் பிளாஸ்மாக்கள் நிறைந்திருப்பதை சந்திரயான் 2 ஆர்ப்பிட்டர் வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் நிலவை நோக்கிய மனித திட்டங்கள், ஆய்வு மையங்கள், ரோபோக்களை உருவாக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
2019 ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2ன் லேண்டர் அங்கு தரையிறங்க முடியாவிட்டாலும், அதன் ஆர்ப்பிட்டர் நிலவைச்சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்த ஆர்பிட்டர் நிலவைப் பற்றிய முக்கிய தரவுகளை வழங்கி இருக்கிறது. சந்திரனின் வளிமண்டலத்தில் இருக்கும் பிளாஸ்மாவின் அளவை சந்திரயான் 2 ஆர்பிட்டர் தரவாக சேகரித்துள்ளது. முதலில் பிளாஸ்மா என்றால் என்ன? என்பது பற்றி விவரிக்கிறார் மூத்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்.
அவர் கூறுகையில், “பொருட்கள் திட, திரவ, வாயு என்று மூன்று நிலைகளில் உள்ளதை நாம் பள்ளிக்கூடங்களிலேயே படிக்கிறோம். ஆனால், பொருட்களுக்கு வேறு சில நிலைகளும் இருக்கிறது. அதில், நான்காவது நிலைதான் பிளாஸ்மா நிலை. இயற்கையாக மின்னலுக்குள் இருப்பது பிளாஸ்மாதான்.. சூரியனில் முழுவதும் இருப்பது ப்ளாஸ்மாதான்.
அணுவில் அணுக்கரு இருக்கும், அதைச் சுற்றி எலக்ட்ரான் இருக்கும். இந்த எலக்ட்ரான்களை நீக்கிவிட்டால் நமக்கு இருப்பது ப்ளாஸ்மா. ப்ளாஸ்மா என்பதில், எலக்ட்ரான் அணுவின் கருவில் பிணைந்து இருக்காது. அணுவின் கருக்கள் தனித்தனியாக இருக்கும். இந்நிலையில், அணுக்கரு பாசிட்டிவ் சார்ஜ் ஆகவும், எலக்ட்ரான் நெகட்டிவ் சார்ஜ் ஆகவும் இருக்கும். இதுதான் ப்ளாஸ்மா நிலை” எனத் தெரிவித்தார்.
சந்திரனைச் சுற்றியுள்ள பிளாஸ்மா விநியோகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் S-band Telemetry எனும் ஒரு புதுமையான முறையைப் பயன்படுத்தினர். அதன் மூலம் சந்திர வளிமண்டலத்தில் ஒரு கன சென்டிமீட்டருக்கு சுமார் 23,000 எலக்ட்ரான்கள் என்ற வியக்கத்தக்க உயர் எலக்ட்ரான் அடர்த்தியை வெளிப்படுத்தின. இதற்கு முன்பு நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையங்கள் கண்டறிந்த பிளாஸ்மாவின் அளவைவிட 100 மடங்கு அதிகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்மாவை பற்றிய புதிய கண்டுபிடிப்பு நிலவின் ஒட்டுமொத்த தன்மையை அறிந்து கொள்ள உதவும் எனக் கூறப்படுகிறது. எலக்ட்ரான்கள் அதிகமாக இருப்பதால் நிலவுத் தளங்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் பூமிக்கிடையேயான தொடர்பில் தடங்கல்களை ஏற்படுத்தலாம் என்பதால் அதிக அதிர்வெண் கொண்ட சாதனங்களை பயன்படுத்த இந்த கண்டுபிடிப்பு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதே போல மின்சாதன பயன்பாடு, மனித குடியேற்றம் என பல்வேறு விதமான ஆய்வு நடவடிக்கைகளுக்கு பிளாஸ்மாவின் செரிவு பற்றிய இஸ்ரோவின் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.