ARTICLE AD BOX
பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இதுதொடர்பாக நிஷாந்த் குமார் கூறுகையில்,
பிகார் முதல்வரும், தனது தந்தையுமான நிதீஷ் குமார் மாநிலத்தில் நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்திருப்பதால் பிகார் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கடந்த தேர்தலில் மக்கள் 43 இடங்களில் வெற்றியை வழங்கினர். வளர்ச்சியின் வேகத்தைத் தொடர, தேர்தலில் அதிக இடங்களை வெல்வதைப் பொதுமக்கள் உறுதிசெய்ய வேண்டும்.
கடந்த 19 ஆண்டுகளில் முதல்வர் நிதீஷ் குமார் செய்துள்ள கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுமாறு ஐக்கிய ஜனதா தளத் தொழிலாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். வரவிருக்கும் தேர்தலுக்கு (நிதிஷ் குமார்) முதல்வர் வேட்பாளர் என்பதைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும். அவரது தலைமையில் பிகாரில் மீண்டும் அரசு அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக இன்று காலை பிகார் தேர்தலில் தேசிய ஜனநாகக் கூட்டணி குறித்து பட்னாவில் அரசு விருந்தினர் இல்லத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவும், முதல்வர் நிதீஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கநலந்துகொண்டனர். பிகார் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முன்கூட்டியே தேர்தல் பணிகள் தொடர்பாக இருதரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் உள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் 243 தொகுதிகளுக்கும் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடைசியாக 2020 அக்டோபர்-நவம்பரில் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.