ARTICLE AD BOX

வாணியம்பாடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எ.வ. வேலு, மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய மானியத்தை குறைத்து மாநில ஆட்சியாளர்களின் பெயரை கெடுக்க நினைக்கின்றது. கீழடி தமிழர்களின் தொன்மையான வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது. 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புக்காலம் இருந்தது, அதுவும் தமிழருடைய காலம் என்பதை உலகிற்கு அறிவித்தவர் முதலமைச்சர். அவர்தான் உண்மையான இரும்பு மனிதர். அவர் தாய்மொழிக்காக எவருக்கும் மண்டியிட மாட்டேன் என கூறுகிறார். ஆனால் பலர் மத்திய அரசுக்கு பயந்து மண்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்திற்கான நிதியை தராமல் தன்மானத்தின் மீது கை வைக்கிறார்கள்.
நம் பண்பாட்டின் அடையாளம் தான் மொழி. வட இந்தியர்கள் தமிழர்களைப் போல் வேட்டி சட்டை உடைகளை உடுத்துவது கிடையாது. நம்முடைய தமிழ் மொழியை அழிக்க படை எடுப்பு நடைபெறுகிறது. முன்மொழி கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்று கூறுகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மொழி இந்தி. ஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்த மொழி தான் தமிழ். பிரதமர் மோடி தமிழ் பிடிக்கும் என்று கூறிவிட்டு ஐநாவில் தமிழ் படிக்கின்றார்.
பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் இந்தியை தாய் மொழியாக பயின்றவர்கள். அவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் வந்து கொத்தனார் வேலையும் பானி பூரி மற்றும் பஞ்சுமிட்டாய் விற்கும் வேலையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமஸ்கிருதம் படித்ததால் மருத்துவராக முடியுமா வெளிநாட்டில் போய் பொருளாதாரம் வளர்ச்சி அடைய முடியுமா என்று பொய்யான கருத்துக்களை கூறி வருகிறார்கள். தொடர்பு மொழியை படித்ததால் தான் வெளிநாட்டில் சென்று ஆங்கிலம் பேச முடிகின்றது. பொருளாதாரம் வளர்ச்சி அடைய முடிகின்றது. தமிழை போற்றுவோம். முதல்வருடன் துணையாக இருந்து இந்தி திணிப்பை எதிர்ப்போம், இந்தி பேயை ஓட்டுவோம் என எ.வ வேலு தெரிவித்துள்ளார்.