ARTICLE AD BOX

நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சீமானை இன்று நேரில் ஆஜராக கூறி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவருக்கு மீண்டும் சம்மன் வழங்க காவல்துறையினர் நேரில் சென்றபோது அவர் வீட்டில் இல்லாததால் அவரது வீட்டில் சம்மனை ஒட்டினர். ஆனால் சில நொடிகளிலேயே சீமான் வீட்டு பாதுகாவலர் அதனை கிழித்து எறிந்தார். அவரை கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டபோது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினரை நோக்கி தன்னுடைய துப்பாக்கியை பாதுகாவலர் நீட்டியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஓசூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், எனக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய போது நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே வர முடியாது. நிகழ்ச்சிகள் முடிந்ததும் வருகிறேன் என்று தெரிவித்திருந்தேன். தினம்தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறேன். எனவே இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது. இந்த அரசு இதே போல் வேறு எதிலாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என்று பாருங்கள். நான் இந்த நிகழ்ச்சியில் இருப்பது இங்கு பாதுகாப்பில் இருக்கும் காவலர்களுக்கும் அங்கு இருக்கும் காவலர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
இருந்தும் ஏன் என்னுடைய வீட்டில் சம்மன் ஒட்ட வேண்டும். அதனால் அங்கிருந்த என் தம்பி ஒருவர் அதனை கிழித்து விட்டார். நான்தான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேனே பின்னர் எதற்கு இந்த வேலையை செய்கிறீர்கள். நாளை காலை 11 மணிக்கு வந்தாக வேண்டும் என்று சொல்கிறார்கள். என்னால் வர முடியாது, உங்களால் என்ன செய்ய முடியும். என்னை சமாளிக்க முடியவில்லை என்றால் அந்தப் பெண்ணை திமுக ஆட்சியில் இருப்பவர்கள் அழைத்து வருவார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.