ARTICLE AD BOX
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் மக்களை சந்திப்பதற்காக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நாளை அப்பகுதிக்கு வருகிறார். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. பரந்தூர் மக்களை சந்திக்க இரண்டு இடங்களை காவல்துறை பரிந்துரைத்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் மட்டுமே தவெகவினர் செல்ல வேண்டும் எனவும் காவல்துறை தரப்பு அறிவுறுத்தியுள்ளது. பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே விஜய் மக்களை சந்திக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து கட்சி தொண்டர்களுக்கு ஓர் அறிவுரை வழங்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே தவெகவினர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் பகுதி தவெக தொண்டர்கள் யாரும் பரந்தூர் பகுதிக்கு வரவேண்டாம் என விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் அங்குள்ள மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளதாகவும் அதற்கு இடையூறாக தவெக தொண்டர்கள் அதிகமானோர் கூடிவிட கூடாது எனவும் அறிவுறுத்தல்கள் சென்றதாக தகவல்கள் கூறப்படுகிறது.
தவெக முதல் மாநாடு, அம்பேத்கர் புத்தக வெளியீடு, கல்வி உதவி வழங்கும் விழா உள்ளிட்ட மேடை நிகழ்வுகளை தவிர்த்து தற்போது தவெக தலைவராக விஜய் முதல் முதலாக பரந்தூர் மக்களை களத்தில் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.