ARTICLE AD BOX
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாட உள்ள ரிங்கு சிங் தற்போது பயிற்சி போட்டியில் 33 பந்துகளில் 77 ரன்களை விளாசி மிரட்டி இருக்கிறார். இதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், ரிங்கு சிங்கை கடந்த ஆண்டு போல வீணாக்காமல் சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் ஆலோசனைகளை கூறி வருகின்றனர். ரிங்கு சிங் 2023 ஐபிஎல் தொடரில் உச்சகட்டத்தை எட்டினார். அந்தத் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஃபினிஷராக அபாரமாக செயல்பட்டார்.

ஒரு போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். அதன் மூலம் இந்தியா முழுவதும் அனைவராலும் விரும்பப்பட்ட வீரராகவும் மாறினார். இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டு அவருக்கு சராசரியான ஆண்டாகவே அமைந்தது.
2024 ஐபிஎல் தொடரிலும் ரிங்கு சிங் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிக அளவில் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்ததால் பின்வரிசைக்கு தள்ளப்பட்டார். கடைசி இரண்டு, மூன்று ஓவர் இருக்கும் போது தான் ரிங்கு சிங்கிற்கு பெரும்பாலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதனால் அவரது தன்னம்பிக்கையும் சரிவை சந்தித்தது.
அதை தொடர்ந்து அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2024 டி20 உலக கோப்பை ஆடிய இந்திய அணியில் ரிங்கு சிங் மாற்று வீரராக மட்டுமே இடம் பிடித்தார். அவர் இல்லாத நிலையில், இந்திய அணி உலக கோப்பையையும் வென்றது. இதை அடுத்து பலரும் டி20 அணியில் ரிங்கு சிங் இருப்பதை மறந்து விட்டனர்.
அதன் பின் இந்திய அணி ஆடிய இருதரப்பு டி20 தொடர்களில் அவர் ஆடினாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பயிற்சி போட்டியில் ரிங்கு சிங் அதிரடியாக ஆடி ரன் குவித்துள்ளார்.
மரண அடி அடித்த இஷான் கிஷன்.. ஆடிப் போன SRH கூடாரம்.. எந்த இடத்தில் ஆட வைப்பது என்றே தெரியவில்லை!
2023 ஆம் ஆண்டில் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடியது போல இப்போது பயிற்சி போட்டியில் முதல் அடியை எடுத்து வைத்து இருக்கிறார். இந்த பயிற்சி போட்டியில் அவர் 33 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து இருக்கிறார். இதை அடுத்து அவருக்கு கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவனில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அவர் தனது பழைய அடையாளத்தை மீட்டெடுத்து மீண்டும் பெரிய அளவில் வளம் வருவார் என எதிர்பார்க்கலாம்.