ARTICLE AD BOX
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சொன்னது போல் நான் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தவில்லை. அந்த இடம் எங்களுடையது என்பதால் என் பெயரை பயன்படுத்துகிறார்கள். இன்னும் அந்த பள்ளி செயல்படவே இல்லை. ஒரு மாணவர் கூட சேராத பள்ளியில் மும்மொழி கட்டாயமாக வைத்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மும்மொழி கொள்கை அமல்படுத்தும் வரை கல்விக்கான நிதி வழக்கப்பட மாட்டாது என்று மத்திய கல்வி அமைச்சர் கூறியதை தொடந்து தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மறுபக்கம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியல் தலைவர்களில் யார் யார் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தி வருகிறார்கள் என்பது குறித்து பேட்டிகளில் கூறி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார். இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள திருமாவளவன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சொன்னது போல் நான் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தவில்லை. அந்த இடம் எங்களுடையது என்பதால் என் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரி கருத்தரங்கில் பங்கேற்ற, திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், யார் வேண்டுமானாலும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். அதற்கு மாற்றுஎதுவும் இல்லை. தமிழ்நாட்டில் இந்தி சொல்லித் தரப்படுகிறது. இந்தி பிரச்சார சபை இருக்கிறது. கேந்திரிய வித்யாலயாவில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இந்தி கற்றுக்கொடுக்கிறார்கள்.
இதை யாரும் பெரிய அளவில் எதிர்க்கவில்லை. ஆனால் மத்திய அரசு 'ஒரே தேசம்; ஒரே மொழி' என்கின்ற நிலைப்பாட்டை எடுத்து இந்தி மொழியை திணிக்கப் பார்க்கிறது. இந்தி இந்த தேசத்தின் ஒற்றை மொழியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள், முயற்சிக்கிறார்கள். இதை அவர்கள் மறுக்க முடியாது. ஒரே தேசம்; ஒரே கலாச்சாரம் என்பது அவர்களின் நிலைப்பாடு என்பதைப் போல ஒரே தேசம்; ஒரே மொழி என்பதும் அவர்களின் நிலைப்பாடு. எனவே இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். ஒரு தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுப்பது என்பது வேறு. அரசே ஒரு கொள்கையாக வரையறுத்து திணிப்பது என்பது வேறு. மும்மொழி கொள்கை என்பது ஒரே மொழி ஒரே தேசம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்துவதால் அதை நாங்கள் எதிர்க்கிறோம்.
நான் சிபிஎஸ்சி நடத்துவதாகக் கூறுகிறார்கள். நான் நடத்தவில்லை எங்கள் இடத்தில் ஒருவர் நடத்துகிறார். பள்ளியின் பெயர் மட்டும் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. எங்க இடம் என்பதால் என்னுடைய பெயரை பயன்படுத்துகிறார்கள். இன்னும் அந்த பள்ளி செயல்படவே இல்லை. ஒரு மாணவர் கூட சேராத பள்ளியில் மும்மொழி கட்டாயமாக வைத்துள்ளனர். தமிழ்நாடு மாணவர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தால், மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்று தந்திருக்கலாம். அதற்காக குரல் கொடுக்கவில்லை.
அதேபோல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற கல்வி நிறுவனம், விளிம்பு நிலை மக்களுக்கான கல்வி நிறுவனமாக இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு முறையாக நிதி வருவதில்லை. மத்திய அரசு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான உதவித் தொகை தரப்படுவதை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. ஏழை மாணவர்களின் கல்வி முக்கியம் என்று அண்ணாமலை கருதினால், அவர்கள் போஸ்ட் மெட்ரிக் ஸ்கார்லர்ஷிப் வாங்கி கொடுப்பதை பற்றி பேசி இருக்க வேண்டும். அதனை ஏன் அண்ணாமலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து குரல் கொடுத்திருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் உள்ள ப்ளூ ஸ்டார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவராக செயல்படுகிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவரும், மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.