ARTICLE AD BOX

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
இந்த நிலையில், லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றினார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து வரவேற்றார்.
அதன் பின்னர் இளையராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
என்னை இசைக்கடவுள் என்றெல்லாம் ரசிகர்கள் சொல்வதை கேட்கும்போது.. 'இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களேப் பா..' என்றுதான் எனக்குத் தோன்றும். நான் சாதாரண மனிதனைப் போலத்தான் வேலை செய்கிறேன். என்னைப் பற்றி எனக்கு ஒரு எண்ணமும் கிடையாது.
பண்ணைபுரத்தில் இருந்து இன்றுவரை எனது கால்களில் நடந்து, எனது கால்களில்தான் நான் நிற்கிறேன். 82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம்; இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறேன். லண்டனைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
சிம்பொனியை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள். அதனை நேரில் உணர வேண்டும். நம்மண்ணிலும் நடக்கும் அதுவரை காத்திருக்கவும். இந்த சிம்பொனி உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும். இசை கோர்ப்பாளர் நிகில் டாம்ஸ் சிறப்பாக நிகழ்ச்சியை அமைத்துக் கொடுத்தார். அரசு மரியாதையுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை வரவேற்றது மனம் நெகிழச் செய்தது. அவருக்கு என நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.