ARTICLE AD BOX

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஜனவரி 28 அன்று, மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் துணைத் தலைவர் ரகு உட்பட 500 பேர், சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் பால்பண்ணை ரமேஷ், மெய்யனூர் செல்வமூர்த்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாதகவில் இருந்து விலகினர்.
ஜனவரி 10 அன்று, கடலூர் கிழக்கு மாவட்ட நாதக தலைவர் மகாதேவன் கட்சியின் கொள்கைகள் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்து விலகினார். அதைப்போல, பிப்ரவரி 19 அன்று, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன், சீமான் செயல்பாடுகள் மற்றும் கருத்து ஏற்புடையதாக இல்லை என கூறி விலகினார்.
அவர்களை தொடர்ந்து கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த காளியம்மாளும் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் கட்சியில் இருந்து விலக என்ன காரணம் என்பது பற்றிய தகவலும் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருக்கிறது.
அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் காளியம்மாள் பெயருக்கு கீழ் நாதக பொறுப்பு இடம்பெறாமல், சமூக செயற்பாட்டாளர் என்று மட்டுமே போடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, நிகழ்ச்சியில் நாதக மட்டுமின்றி திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளும் கலந்து கொள்ளவிருப்பதால் காளியம்மாள் நாதகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காளியம்மாள் பேசி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விரைவில் இது அனைத்திற்கும் நானே பதில் சொல்கிறேன்” என கூறியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாகவே கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வந்த காளியம்மாள் இப்படி கூறியதும் பரவி வரும் தகவலை பார்க்கையிலும் கிட்டத்தட்ட அவர் விலகுவது உறுதி என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.