ARTICLE AD BOX
நாங்கள் பிரிவினை கேட்கவில்லை. நீங்கள்தான் கேட்க வைக்கிறீர்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்து உள்ளார்.
திராவிட இயக்க ஆய்வாளர் சு.திருநாவுக்கரசு எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு என்ற நூல் வெளியீடு விழா நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை துவக்கிய நேரத்தில் ஒரு கருத்தை சொன்னார். கொட்டுகின்ற மலையில் வீசுகின்ற புயலில் சரலைக் கற்கள் நிரப்பிய மலை உச்சியை நோக்கி நாம் நடக்கிறோம் கையிலே ஒரு அகல் விளக்கு அந்த அகல் விளக்கு அணையாமல் இருப்பதற்கு தமிழர்களே வாருங்கள். உங்கள் கரத்தை காட்டுங்கள் என்று சொன்னார். திமுக தொடங்கப்பட்டபோது அந்த அகல்விளக்கை காப்பாற்றுவதற்கு வாருங்கள் தமிழர்களே என்று அழைத்தார். நாங்கள் அமைச்சர்களாக கட்சியிலும் ஆட்சிப் பொறுப்பிலும் விளங்குவதற்கு காரணம் அண்ணன் திருநாவுக்கரசு போன்றவர்களுடைய இந்த கடின உழைப்பும் கொள்கை பற்றும்தான். திராவிட இயக்கம் 1913ஆம் ஆண்டில் தொடங்கி 1925 சுயமரியாதை இயக்கமாக மாறியது. 1944 ஆம் ஆண்டில் திராவிடர் கழகமாக ஆகி, தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.
பிரதமருக்கு ஆ.ராசா பதில்
இன்றைக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியிருக்கிறார். மொழியால் நாட்டை தூண்டாட பார்க்கிறார்கள் என்று. எங்களோடு உணர்வில், உயர்வில் எல்லாவற்றிலும் கலந்து தாய்மொழியாக இருக்கின்ற தமிழால் நாங்கள் இருக்கிறோம். தாய்மொழியால் நாங்கள் நாட்டை பிரிப்போம் என்ற ஐயம் உங்களுக்கு இருக்குமானால் ஒன்றுமே இல்லாத போலியை வைத்துக்கொண்டு மதத்தால் பிரிக்கிறீர்களே என்ன நியாயம் என்று நாங்கள் கேட்க மாட்டோமா?
ஷட் அப் மோடி என்று சொல்வோம்
இன்னும் நீங்கள் பேசினால் இந்த மேடையில் இருந்து சொல்லுகிறேன் ’கோ பேக் மோடி’ என்று சொன்னோம். துணை முதலமைச்சர் சொன்னார் ’கெட் அவுட் மோடி’ என்று சொன்னார். நாடாளுமன்றத்தில் விரைவில் சொல்லுவோம் ’ஷட் அப் மோடி’ என்று.
அம்பேத்கர் ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டத்தில் சாதி ஒழிய வேண்டும். தலித் விடுதலை வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் மத்திய அரசாங்கம் வலிமையாக இருக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் பெரியார் 1957ஆம் அரசியல் சட்டத்தை கொளுத்திய போது, ’பார்ப்பன பனியா ஆதிக்கத்தில் இருந்து தனி தமிழ்நாடு பெறவும், இன இழிவு ஒழியவும் சிறை செல்கிறேன்’ என்று சொன்னார்.
பிரிவினை கேட்க வைக்கிறீர்கள்
தனித்தமிழ்நாடு பெரியார் கேட்ட காரணமே சாதி ஒழிந்த தனித்தமிழ்நாடு வேண்டும் என்றுதான். பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் சாதி ஒழிப்பிலே ஒரு பொது கருத்து உண்டு. ஆனால் மொழி உணர்வில் வெவ்வேறு கருத்து உண்டு. இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு இந்தி - உருது மொழிகளை இணைத்து இந்துஸ்தானி மொழியை உருவாக்கலாம் என்று காந்தி சொன்னார். மேற்கு வங்காளத்தையும், கிழக்கு வங்காளத்தையும் பிரித்தது எது? மொழிதானே. மதம் சேர்க்காது, மொழிதான் சேர்க்கும். மொழியால் பிரிக்கிறோம் என்று நீங்கள் சொன்னால், நாங்கள் பிரிவினை கேட்கவில்லை. நீங்கள் தான் எங்களை பிரிவினையை கேட்க வைக்கிறீர்கள் என்று பொருள்.
