ARTICLE AD BOX
பொதுவாக நம் உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. ஒன்று HDL எனப்படும் நல்ல கொழுப்பு. மற்றது LDL எனப்படும் கெட்ட கொழுப்பாகும்.
தவறான வாழ்வியல் மற்றும் உணவு முறைப் பழக்கங்களின் மூலம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. LDL அளவு அதிகரிக்கும்போது அவை படிப்படியாக இரத்தக் குழாய்களில் சேர்ந்து அடைப்பை உண்டாக்கும். அதன் பின் விளைவுகளாய் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற அபாயகரமான பாதிப்புகள் உடலைத் தாக்கும் வாய்ப்பு உருவாகும்.
இதைத் தடுப்பதற்கு ஆரம்பம் முதலே கெட்ட கொழுப்பின் அளவைக் கண்காணிப்பது அவசியம். LDL அளவு அதிகரிப்பதை உடலில் தோன்றும் சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
நம் சருமத்தில் இது சம்பந்தமாகத் தோன்றும் அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
கண்களை சுற்றிலும் மஞ்சள் நிறப்புள்ளிகள்:
கண்களை சுற்றியுள்ள சருமத்தின் அடிப்பகுதியில் கொழுப்புகள் படிவதால் தோலின் மீது மஞ்சள் நிறப் புள்ளிகள் ஒரு அடுக்காக (Layer) தோற்றமளிக்கும். இதை மருத்துவ மொழியில் க்ஸான்த்தலாஸ்மா (Xanthelasma) எனக் கூறுவர். இது தவிர கண்களை சுற்றிலும் சிறு சிறு பருக்களும் தோன்றலாம்.
சருமத்தின் நிறத்தில் மாற்றம்:
கெட்ட கொழுப்பு உடலில் அதிகரிக்கும்போது சருமத்தின் நிறத்தில் மாற்றம் உண்டாகும். அப்போது முகத்தின் நிறம் சிறிது கருமையாகவோ அல்லது மஞ்சளாகவோ மாற ஆரம்பிக்கும். இது முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் கிடைக்கவில்லை என்பதைக் குறிக்கும் அறிகுறியாகும்.
சொரியாசிஸ் பிரச்னை:
கெட்ட கொழுப்பின் அதிகரிப்பால், ஹைப்பர்லிபிடெமியா (Hyperlipidemia) எனப்படும் சொரியாசிஸ் நோய்த் தாக்குதல் சருமத்தில் உண்டாகும். இதனால் சருமம் உலர்ந்தும் தடிப்புகளுடனும் காணப்படும்.
சருமத்தில் தோன்றும் ஊதா அல்லது பர்ப்பிள் நிற புள்ளிகள்:
கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, கை, கால், முகம் போன்ற பகுதிகளில் சருமத்தின் மேற்பரப்பில் ஊதா அல்லது பர்ப்பிள் நிற புள்ளிகள் அல்லது ஒரு வலை போன்ற வடிவில் படர்ந்த திட்டுக்கள் காணப்படும். இந்தப் பகுதிகளுக்கு சரியான அளவு இரத்தம் செலுத்தப் படவில்லை என்பதையே இது குறிக்கும்.
சருமத்தில் எரிச்சல் அல்லது அரிப்பு உண்டாதல்:
உடலுக்குள் கெட்ட கொழுப்பு அதிகமாகும்போது சருமத்தின் மீது பயங்கரமாக அரிப்பும் எரிச்சலும் உண்டாகும். அதோடு கூட, எந்த காரணமுமின்றி அங்கங்கே வீக்கங்களும் தோன்றும்.
உடலில் மேற்கூறிய அறிகுறிகளைக் காணும்போது சிறிதும் தாமதிக்காமல் மருத்துவரைக் கலந்தாலோசித்து சிகிச்சை பெற்றுக்கொள்வது நன்மை தரும்.